வழக்கமான ஓர் காதல் கவிதை

இளமையில் இதயம் காதல் கீதம் இசைத்தால்,
பேதையின் பிதற்றலும் இசைஞானியின்
பாடல்போல் இனித்திடும்..

தனிமை தென்றலும் மனதை மெல்ல
வருடி இனிமை சேர்த்திடும்..
சித்திரை நிலவும் நித்திரை கலைத்து
வைகறை பொழுதிலும் உறங்கிட மறுக்கும்..

பங்குனி வெயிலும் பாவை மொழியும்
மார்கழி பனியாகும்.. பூங்கதிர் சோலையவள்
பச்சிளம் பிஞ்சுப் பொன்விரல் பிடித்து
நடந்தால் நெடுஞ்சாலை பயணமும் குறுந்தூரமாகிடும்..

நித்தம் நிதமும் இரத்தம் முழுதும் வேலைநிறுத்த
யுத்தம் செய்திடும்.. அவளை காணா நாட்களும்
வீணாய் போகும்.. அவள் மௌனம் கேளாது
தேனாய் இனித்திடும் இசையும் தேளாய் கொல்லும்..

இதழ்களுக்கு ஓய்வும் விரல்களுக்கு பணியும் தந்து
இதயம் இரண்டையும் இணைத்திடும் பாலம் இணையமாகிடும்..
முகப்புத்தகம் மூடாப் பாடப்புத்தகமாகும்..
வாட்ஸ் ஆப் செயலியே புகலிடமாகும்..

குறுஞ்செய்தியின் சிறுவொலியும் தேசிய கீதமாகும்..
மெத்தையின் மேனியில் சாய்ந்திடும் தருணம்
சொர்க்கத்தின் தாய்மடியாகிப்போகும்..

போர்வையின் புறத்தே இருள் சூழ்ந்து கிடக்க
கைபேசியின் வெளிச்சம் மின்மினியின்
கூட்டைப்போல் மின்னிடும்..

எழுதியவர் : (29-Dec-16, 3:15 pm)
பார்வை : 102

மேலே