யானையை ஏவியது
தேவதத்தன் அதனோடு நின்றுவிடவில்லை. நாலாகிரி என்னும் பெயருடைய யானைக்கு மதமூட்டிக் கோபங்கொள்ளச் செய்து பகவன் புத்தர் இராசவீதி வழியே வரும்போது அந்த யானையை அவர்மேல் ஏவிவிட்டான். இராசகிருக நகரத்தின் வீதியில் அந்த மதயானை மூர்க்கத்தனமாக வெறிகொண்டு ஓடியது. அதனைக் கண்ட ஜனங்கள் அஞ்சி ஓடினார்கள். மதயானை, பகவன் புத்தரின் அருகில் வந்தபோது, அவருடைய திருமேனியில் இருந்து வெளிப்படும் தெய்வீக ஒளியினால், அதன் மதம் அடங்கிக் கோபம் தணிந்து சாந்தம் அடைந்தது. அது, தும்பிக்கையைத் தாழ்த்திப் பகவருக்குத் தலை வணங்கிற்று. பிறகு சாந்தமாகத் திரும்பிப் போய்விட்டது. இவ்வாறு தேவதத்தன், பகவன் புத்தரைக் கொல்லச் செய்த சூழ்ச்சிகளும் முயற்சிகளும் பயன்படாமற் போயின.