பிளவு உண்டாக்கியது
தனது சூழ்ச்சிகள் நிறைவேறாமற் போகவே தேவதத்தன் வேறுவிதமாகச் சூழ்ச்சி செய்தான். பௌத்தச் சங்கத்திலே பிளவு உண்டாக்கி அதனால் வெற்றியடையலாம் என்று எண்ணினான். பௌத்த சங்கப் பிக்குகளில் தன் பேச்சைக் கேட்கக்கூடிய சிலரை அழைத்து, பகவன் புத்தர் உடன்பட முடியாத சில புதிய கொள்கைகளை அவர்களுக்குக் கூறி அவைகளைப் புத்தர் ஏற்றுக்கொள்ளச் செய்யும்படி அனுப்பினான். அவர்கள் சென்று புத்தரிடம் அக்கொள்கைகளைக் கூறி அவற்றை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டார்கள். பகவர் அவைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தார். இந்தப் பிக்குகள் புதிதாகப் பௌத்தமதத்திற்கு வந்தவர்கள். விநய முறைகளை அறியாதவர்கள். இவர்களுடைய கொள்கையைப் பகவன் புத்தர் மறுக்கவே, இவர்கள் தேவதத்தனுடன் சேர்ந்து அவனைத் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள்.
தேவதத்தன் ஐந்நூறு புதிய பிக்குகளை அழைத்துக் கொண்டு அவர்களுக்குத் தலைமைப் பதவியை ஏற்று, கயாசீர்ஷமலைக்குச் சென்றான். சென்று, பிக்குகளுக்கு உபதேசம் செய்தான். இந்தப் பிக்குகளின் கூட்டத்தில் சாரிபுத்திர மகாதேரரும் மொக்கல்லான மகாதேரரும் இருந்தார்கள். இவர்களைக் கண்ட தேவதத்தன், இவர்களும் தன்னைத் தலைவனாக ஏற்றுக்கொண்டார்கள் என்று தவராக கருதி, சாரிபுத்திர மகாதேரரை அழைத்து, பிக்குகளுக்கு உபதேசம் கொடுக்கும்படியும் தனக்குக் கலைப்பும் தூக்கமும் வருகிறபடியால் தான் சென்று தூங்கப்போவதாகவும் கூறிச் சென்றான். சாரி புத்திரதேரரும் மொக்கல்லாதேரரும் பிக்கு சங்கத்தாருக்குப் போதனை செய்து அவர்களைப் பகவன் புத்தரிடம் திரும்பி வரும்படிக் கூறினார்கள். அவர்கள் பேச்சுக்களைக் கேட்ட அப்புதிய பிக்குகள் உண்மை உணர்ந்து, தங்கள் அறியாமைக்கு வருந்தி, பகவன் புத்தரிடம் சென்றார்கள். தேவதத்தன் விழித்தெழுந்து நடந்ததையறிந்து ஆத்திரத்தினாலும் கோபத்தினாலும் இரத்தம் கக்கி இறந்துபோனான்.
அஜாதசத்துரு அரசன், தான் தனது தந்தையாகிய விம்பசார அரசனைக் கொன்ற குற்றம் அவன் மனத்தில் உறுத்தியது. அவனுடைய மனச்சாட்சி அவனைத் துன்புறுத்தியது. அவன் மனம் அமைதி இல்லாமல் வருந்திற்று. தனது மனத்தை அமைதியாக்கிக் கொள்ள எண்ணி அவன் பல சமயத்தலைவர்களிடம் சென்றான். அவர்கள் போதனை அவனுக்குச் சாந்தியை உண்டாக்கவில்லை. கடைசியாக அரண்மனை வைத்தியனாகிய ஜீவகன் கூறிய யோசனையின் படி அவன் பகவன் புத்தரிடம் வந்தான். வந்து அவரிடம் தர்மம் கேட்டுப் பௌத்தனானான்.
பகவன் புத்தரின் எழுபத்தொன்பதாவது வயதுக்குப் பிறகு ததாகதர் வைசாலியிருந்து புறப்பட்டுப் பேலுவநகரம் சென்று சிலநாள் தங்கினார். அங்கே இருக்கும்போது அவருக்கு உடம்பில் நோய் கண்டது. ஆனால், பகவர் அவற்றைப் பொறுத்துக் கொண்டார். தமது எண்பதாவது வயதில் தமக்குப் பரிநிர்வாணம் ஏற்படும் என்பதை அவர் அறிந்தார். பிறகு, அவர் வழக்கம்போல் பல இடங்களுக்குச் சென்று அறநெறியைப் போதித்துக் கொண்டிருந்தார். பிறகு பாவாபுரிக்குச் சென்று, அந்நகரத்துக் கருமானாகிய சுந்தன் என்பனுடைய மாந்தோப்பில் தங்கினார்.