முற்றுப்புள்ளியில் தொடங்கும் ஊர்வலம் - சந்தோஷ்
நீ வைத்த
கருவாட்டுக் குழம்பில்
காதல் வாசம்.......!
**
உன் ரயிலில்
நான் சக பயணி.
என் ரயிலில்
நீயே பயணி..!
**
அதிகாலை கூந்தல் முடிச்சில்
சிக்கிக்கொண்ட என் மீசையை முறுக்கும்
அவளோடு நான் காதல் வசம்.
அது அவ்வளவும் மோக வாசம்.
**
பசிப்பது போல
வலிக்கிறது உன் நினைவு.
**
எனக்கான வாழ்க்கையில்
திரைக்கதையை நீ எழுதாதே..!
உனக்கான கதையை
நான் எழுதமாட்டேன்...!
**
என் நூலகத்தில்
நீ வாசிக்கப்பட்ட புத்தகம்.
**
என் தலையெழுத்து
ஓர் அந்தரங்க கவிதை
**
ஒரு தனியறை
ஒரு மேஜை
ஒரு பேனா
ஒரு நாள்
ஒரு நான்
ஒரு கவிதை
ஒரு வாக்குமூலம்
ஒரு மரணம்
***
உன் இதழ் கொடுக்கும்
முத்தம்
மொழியற்ற ஓர்
இலக்கியம்!
**
உனது வலது
எனது இடது சிறகுகளால் ஆனது
நம் காதல் பறவை!
***
உன் ஆத்ம ராகத்தில்
இணங்கும் தாலாட்டு நான்!
**
உன் பெயரையும்
என் பெயரையும்
முத்தமிட்டு திட்டமிட்டு
நுரையிதழால் கவ்விக்கொண்டு
கடத்திக்கொண்டுச் சென்றுவிட்டதடி
நாம் காதலித்த ஆழி..
**
அவனுக்கும் அவளுக்குமான
காதல் நிறைவேறாமல் போனதற்கு
காரணங்கள் ஏதும் பெரிதாக இல்லை.
அவளது முன்னோர்கள்
காஃபி மட்டுமே அருந்துவார்களாம்.
அவனது முன்னோர்கள்
டீ மட்டுமே அருந்துவார்களாம்.
**
நாடோடியாய் செல்லும்
கரும் மேகங்களை
நானும்
தொட்டு தொட்டு
ஓடோடிச் செல்வேன்...
ஓ.. விதியே..
என் கால்களை விடுவித்துவிடு
அல்லது
எந்தன் முதுகில் சுதந்திர
சிறகை வளர்க்க விடு.
அசாதாரண
கதை
திரைக்கதையான
என் வாழ்க்கையில்
வசனங்களை
நான் மட்டுமே
எழுத வேண்டும்.
**
ஒரு முற்றுப்புள்ளியில்
தொடங்குகிறது
எறும்புகளின் ஊர்வலம்
***
திறமையாக
தனியறையில்
வாழ்வது எவ்வளவு
கொடுமையான
இனிமை
தெரியுமா தேவதையே!
இந்த இரவு
என் கனவு
உன் வரவு
இருதயத்தில்
பெரு நதி
ஓடுகிறது. அது
உன் அன்பை
தேடி வருகிறது
**
பிச்சைக்காரனிடம்
எந்த தத்துவமும்
செல்லாது.
பசியால் நொந்தவனிடம்
கம்யூனிஸம்
பேசாதீர்கள்.
சிவப்பு சிந்தனையில்
சிறக்க வேண்டும்
இந்த தேசம்!
அதற்கு முன் தேவை
சே போல வீரம்!
***
கழுதைகளின்
பசிக்கு உதவும்
இதழ்களில்
பிரசுரமாகாத
என் கவிதைகள்
**
--இரா.சந்தோஷ் குமார்
(முகநூலில் அவ்வப்போது எழுதிய வரிகளின் தொகுப்பு . )