நான் மட்டும் விதிவிலக்கா என்ன
கண்களா,
இல்லை நிலவுத்தீவில்
கரை ஒதுங்கிய இரவுகளா?
இதழ் கிண்ணத்தில்
பூத்த புன்னகையை
சூடிக் கொள்ள
ஒற்றைக்கால் தவமிருக்கும்
செவியோர சிகைகளா அவை?
யாரது
இமைகளுக்கு மேல்
நெளிந்த கோடிட்டது?
பிரம்மனா !
விழிகள் வரைவதற்கு முன்
ஒத்திகை பார்த்திருப்பானோ?
இதழ் காணாமல்
இடறிச் சென்ற கனவை
தேடிப் பிடிக்காமல் விடுவேனா ?
அந்தக் காமனும்
உன்
இதழ் வரிப்பள்ளத்தில்
குதித்து தற்கொலை
செய்துக் கொள்வான்..
நான் மட்டும் விதிவிலக்கா என்ன ?