தேடலில் முளைக்கிறேன்

ஆமணக்குச் செடியை
அசைத்து நடந்தது
இனங்காண முடியாத ராகத்தில்
பாடிய அந்தப் பொன் வண்டு
என் மகன் போல் ஒருவன்
எருக்கலைப் பூவில்
ஒரு மூக்குத்தியை பிய்த்து
அழகாக்க எத்தனிக்கிறான்
என் முகவரியற்ற முகத்தை
என் காதல் பிஞ்சின்
சொக்கும் கண்களை
சொருகி வைத்திருக்கிறாள்
அரைத் தூக்கத்தில்
அந்தப் பிறை நிலா
இளையோடிய ஞாபகச் சிறகை
வலி மிகுந்து பின்னித் தீர்க்கிறது
தெருவில் தாயின் பின்னால்
தேம்பியபடி ஒரு குழந்தை
அதோ அந்த கூரையின்
உச்சியில் இருந்து
குஞ்சும் முட்டையுமாய் சிதறி
விழுந்துடைந்த புறாக்களின் கூடு
என் வீட்டைப் போல. .........
தமிழ் உதயா