பொங்கல் திருநாள்

பொங்கல் திருநாள்
தமிழர்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களுள் ‘தமிழர் திருநாள்’ என்று பெருமையுடன் கொண்டாடப்படுகின்ற விழா பொங்கல்.
பொங்கல் ஒவ்வோரு ஆண்டிலும் நான்கு நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இந்திரனைக் குறிக்கும் ‘போகி’ என்பது பொங்கலின் முன்னோடியாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்நாளில் பழையனவற்றைக் களைந்து வீடடைச் சுத்தம் செய்து சுவர்களுக்கு வண்ணம் தீட்டி அலங்கரிக்கப்பட்டு இல்லங்கள் எழிலுடன் காட்சியளிக்கும். பொங்கல் நாளின் முந்தைய நாளான இப்போகிப்பண்டிகை அன்றோ, அதற்கு முன்போ அரிசி, கரும்பு, சர்க்கரை வாழைப்பழம், தேங்காய், மஞ்சள் கொத்து புதிய பானை போன்வற்றை திருமணமான பெண்களுக்குத் தாய் வீட்டிலிருந்து பொங்கல் சீராக கொடுத்தனுப்பும் வழக்கம் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்றும் இருந்து வருகிறது.
தமிழ் ஆண்டில் தைமாதம் முதல் நாள் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் மக்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடை உடுத்தி புது மண்பானையில் கோலமிட்டு புத்தரிசியினால் பொங்கலிடுகின்றனர். சமைத்த பொங்கலை சூரிய பகவானுக்கு கரும்பு, மஞ்சள் சேர்த்து படைத்து மகிழ்கின்றனர். கிராமப்புறங்களில் அதிகாலையில் சூரிய பகவானுக்கான சூரியன் பொங்கலும், மாலையில் வீட்டுப்பொங்கல் எனும் பெயரில் புதிய மண்பானைகளில் மாக்கோலமிட்டு, மஞ்சள்கொத்துக்கட்டி, மண்மேடை அமைத்து சாணமிட்டு மெழுகி அடுப்பு வைத்துப் பொங்கலிடுவது வழக்கத்தில் உள்ளது. பொங்கல் அடுப்பில் பொங்கி வரும் பொழுது, தங்கள் வாழ்விலும் வளங்கள் பொங்க வேண்டும் என்று ‘பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்’ என்று குரல் எழுப்புவர். ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற மூதுரைப்படி இப்பொங்கல் நாளையே ‘உழவர் திருநாள்’ எனவும் அழைக்கின்றனர்.


வான்புகழ் வள்ளுவர்,
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல்பவர்’
என்று உழவர்களின் உழைப்பின் சிறப்பை உலகோர்க்கு ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார். ஆண்டு முழுவதும் உழகை;கும் நமது மக்கள் உண்டு, கண்டு மகிழும் நன்னாள் தான் இப்பொன்னாள் அன்ற ஞாயிறையும், ஐம்பூதங்களையும் மக்கள் வணங்குவர்.
மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம்
தைத்திங்கள் இரண்டாம் நாள் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாக இருக்கம்மாடுகளை மதித்து, கொண்டாடப்படும் நாள் மாட்டுப்பொங்கலாகும். அன்றுகாலையில் மாடுகளை நன்கு குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி, மஞ்சள்பொட்டு வைத்து, மாலை அணிவித்து, தனிப்பொங்கலிட்டு (அரிசி காய்கறிகள் இட்டு) மாடுகளுக்கு உணவு ஊட்டப்படும். இத்தினத்தன்று ஜல்லிக்கட்டு அல்லது மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். மாடுகள் கழுத்திலோ, கொம்பிலோ, வேட்டிகட்டியும், கற்றாழை நாரிலான வண்ணம் தடவிய வில்லுகள் கட்டி மஞ்சுவிரட்டு விடுவது வழக்கம். இம்மாதம் முழுவதும் தென்தமிழ்நாட்டில் கண்மாய் மஞ்சுவிரட்டு என்னும் பெயரில் காளைகளைப் பிடிக்கும் ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வீரவிளையாட்டாக நடைபெறுகின்றது. அன்றைய தினத்தை தமிழக அரசு தெய்வப்புலவர் திருநாளாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காணும் பொங்கல் அல்லது கன்னிப்பொங்கல்
தைத்திங்கள் மூன்றாம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று சிறு பெண்குழந்தைகள் சிறிய அடுப்பு அமைத்து பொங்கலிடுவர். நல்ல கணவன் தங்கள் வாழ்வில் கிடைக்கப்பெற இறைவனை வழிபட பெரியவர்களால் அறிவுறுத்தப்படும் இச் சிறுவர் அன்று பெரியவர்களை வணங்கி ஆசீர்வாதம் பெறுவர்.
பொங்கல் விழாவாகிய இந்நான்கு நாட்களும், தமிழக அரசினால் விடுமுறை அறிவிக்கப்பட்டு சிறந்த முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பொங்கல் கொண்டாட்டம்
இவ்விழா நாட்களில் சிறுவர் முதல் பெரியவர் வரை மகிழ்ந்து இருக்க விளையாட்டுகளும், போட்டிகளும் கிராமப்புற மக்களிடையே தமிழ் சங்கங்கள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற இடங்களில் நடைபெற்று வருகின்றன. சிறப்பு பட்டி மன்றங்களும், வழக்காடு மன்றங்களும் பாட்டுப்போட்டிகளும், பேச்சுப்போட்டிகளும், நாடகங்களும் நடத்தி அறிவிற்கு விருந்து அளித்து அறிவுப்பசியை போக்கி வரும் வழக்த்தைக் காணமுடிகிறது. உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிறப்பு பட்டிமன்ற ஒளிபரப்புகள், புதிய திரைப்பட வெளியீடுகள் போன்றவையும் நடைபெற்று வருகின்றன.
விளையும் பயன்கள்
பொங்கல் விழாவினைக் கொண்டாடுவதினால் தமிழ் பண்பாட்டு உணர்வும், ஒருமைப்பாட்டு உணர்வும், நாகரிக வளர்ச்சியும் மேலோங்குகின்றன. தமிழர் திருநாள் வழிபாடுகள், மரபுகள் மறைந்து போகாமல் கட்டிக்காக்கப்பட்டு வருகின்றன.
‘தமிழர்’ பொங்கல் விழா தரணிக்கோர் புதுவிழா என்பது மூதுரை. ‘மகராசன் பொங்கல் வந்தால் வயறு நிறைய சோறு உண்ணலாம்’ என்பது நாட்டுப்புற மக்களின் வாய்மொழியாகும்.
அறியப்படும் கருத்துக்கள்
நன்னூலாரின் வரிகள்படி,
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்பதை போகிப்பண்டிகை உணர்த்துகிறது. மட்டுமின்றி மனதில் உரைந்து இருக்கும் தீய எண்ணங்கள் களையப்பட்டு புதிய சிந்தனைகள் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது.
இயற்கையைப் போற்றும் மனப்பாங்கும் விவசாயத்திற்கு உதவும் மாட்டினை பெருமைப்படுத்துவதன் வாயிலாக அவ்வுயிர்களையும் மதிக்கும் மனப்பான்மையும் வளர்கிறது. குழந்தைகள் பெரியவர்களை மதித்துப் போற்றும் உணர்வினைப் பெறுவதோடு எதிர்காலத்தில் நல்ல சிறந்த வாழ்க்கைத் துணைவர்களைப்பெற வேண்டும் என்ற உணர்வினை சிறுவயதிலேயே உணர்த்துவதாக அமைகின்றது.
பொங்கல் விழாவின் தொன்மை
தொன்மை இலக்கண நூலான தொல்காப்பிய அகத்திணையில், மருதத்திணை, உழவர், உழத்தியர் என குறிப்பிடப்பட்டுள்ளதும் தொல்காப்பிய மரபியலில் வேளாளர் உழுதுண்டே வாழ்ந்தனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதும் பொங்கல் விழா சார்ந்த கருத்துக்களே. மேலும் சிலப்பதிகாரம் இந்திர விழாவை பொங்கல் விழாவென்றே குறிப்பிடுகின்றது. சங்க இலக்கிய எட்டுத்தொகை முல்லைக்கலியில் கொல்லேறு தழுவுதல் என்று ஜல்லிக்கட்டை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. சங்கப்பெண்கள் ஜல்லிக்கட்டில் வென்ற வீரனையே திருமணம் செய்துள்ளனர் என்னும் குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
புறப்பொருள் வெண்பா மாலை வரிகளின் படி ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி’ என்ற சிறப்பினையும், பல்வேறு புலவர்களால் பெருமைபடுத்தப்பட்டுள்ளதும் ‘செம்மொழி’ உயர்வு பெற்றதுமான தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பழமையான மரபுடைய தமிழர் இன திருநாளான தமிழர் திருநாள் மாறிவரும் உலகில் நவீனமயமாக்கப்படுவதால், சிறிது சிறிதாக அதன் மேன்மையை இழந்து வருகிறது. எனவே ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடப்படும் பெரும் மரபையுடைய தமிழர்திருநாள் வழிமுறை மறையாது ஓங்கி வளரவேண்டும். வீடுதோறும் சுத்தமும், ஊரெல்லாம் உவகையும் நாடெல்லாம் மகிழ்ச்சியும் உழுவோரை உயர்த்தும் உயர்ந்த நாள் தமிழர் திருநாள். இக்கொண்டாட்டங்கள் மறைந்து போகாது தொடர்ந்து நிலைபெற வேண்டும்.
“பொங்குக பொங்குக புது அரிசி…..
மகிழுக மகிழுக மனமென்றும்…..”

“கம்பீரமாக செம்மொழி தொடர்ந்து வளரட்டும்
தமிழன்னை செங்கோல் என்றும் ஓங்கட்டும்…... !! ”

எழுதியவர் : ஆ.ஷைலா ஹெலின் (13-Jan-17, 7:45 am)
சேர்த்தது : ஆஷைலா ஹெலின்
Tanglish : pongal thirunaal
பார்வை : 2201

சிறந்த கட்டுரைகள்

மேலே