பெண்ணை தழுவ முதலில் என்னை தழுவு
தமிழனின் நன்றி மறவாமையின் அடையாளமான பொங்கல் திருநாளன்று ஊருக்கு வாசலான வாடி வாசலுக்கு பின்னால் நின்றபடி பெண்ணை தழுவவேண்டுமானால் முதலில் என்னை தழுவு என்பதைப்போல என்னை முறைத்துப்பார்த்தது ஜல்லிக்கட்டு காளை.
காளையைப்போல் திரிகிறாயே என்று பெயர் பெயர் வாங்கிய இளைஞர்களுக்கும் ,ராஜா,அப்பு என செல்லப்பெயர் வைத்து மகனைப்போல வளர்க்கப்பட்ட காளைக்கும் இடையே நடக்கும் செல்ல சண்டை தான் ஏறுதழுவுதல்.
புழுதி பறக்கும் களத்தில் கொட்டியிருந்த தேங்காய் நார்கள் எனக்கு உயிர்கவசத்தைப்போல் காட்சியளித்தது ,ஒலிபெருக்கியில் வரப்போவது யாருடைய காளை என்பதையும் பரிசுப்பொருட்களையும் தன வெண்கல குரலால் ஒருவர் அறிவிக்க எனது இதயத்துடிப்பும் அதிகரிக்க காளையை தழுவிச்செல்ல நாங்களும் எங்களையெல்லாம் நழுவிச்செல்ல காளையும் காத்துக்கொண்டிருக்க திறந்தே விட்டனர் வாடிவாசலை .....!
தர்மனின் ஈட்டியும் அர்ஜுனனின் அம்பும் பீமனின் கதையும் ஒன்றாக சேர்ந்து தாக்க வருவதைப்போல எங்களைநோக்கி சீறிப்பாய்ந்தது காளை ...நின்று விளையாடும் காளையா இல்லை சீறிப்பாயும் காளையா என யூகிப்பதற்குள் என்னருகே வந்தேவிட்டான்....!
பல வருடம் கழித்து வீட்டுக்கு வரும் ராணுவ வீரனை அவனது குழந்தை அணைத்துக்கொள்வதைப்போல நானும் திமிலை அணைத்துக்கொண்டேன் ...ஒரு சுற்று சுற்றி என்னை உதறி தள்ளியது காளை கீழே விழுந்த வேகத்தில் கையிலிருந்து ரத்தம் வெளிநடப்பு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது கூட்டத்தில் நின்றுக்கொண்டிருந்த என்னவளின் பயம் கலந்த கண்கள் ஊக்கமூட்டியதால் எழுந்து மீண்டும் ஒட்டிப்போய் காளையைத்தழுவினேன் காளையும் விட்டுக்கொடுப்பதாய் தெரியவில்லை மீண்டும் என்னை உதறித்தள்ள முயற்ச்சித்தது உடல் வலிமையையும் மன வலிமையையும் கரம் கோர்த்ததால் தாக்குபிடித்துவிட்டேன் எல்லைக்கோட்டின் கோடியை காளை தாண்டிவிட்டது திமிலுக்கு முத்தமிட்டு இறங்கினேன்.
காளையை தழுவிட்டேன் அவளை தழுவுவது எப்போதோ ......!?