ஜல்லிக்கட்டு போராட்டம்
சொல்லி எழுவாய்
ஆதவனே
இனி உன் விடியல்
கடற்கரையிலிருந்தே
இனி
நீ உதிக்கும் திசை
நாங்கள் இருக்கும் திசையே
காளைகளை காக்க
கோழைகள் மறந்திட
வேலைகளை துச்சமாக்கி
அறமே மூச்சாகி
இளைய சோலைகள்
கடல் நீரில்
பூத்துக் கிடப்பதை
வந்து பார் ஆதவனே
எங்கள் அடையாளத்தை
அழிக்க நினைத்தவன்
அடையாளமே இல்லாமல்
போகப் போவதை
நின்று பார் ஆதவனே
ஆர்பரிக்கும் கடலும்
அச்சம் கொண்டு
அடங்கி
படுத்துக் கிடப்பதை
பதுங்கி நின்று
பார் ஆதவனே
வீறு கொண்ட
இளைய சமூகத்தின்
இந்த சூடு போதும்
புரட்சிப் பூக்கள்
எங்கும் பூக்கும்
இனி நீ
ஒதுங்கிப் போ ஆதவனே
அறம் அது
எங்கள் சமூகம்
உலகுக்கு தந்த வரம்
அதன் நிறம்
எப்படி இருக்கும் என
கொஞ்சம் கடற்கரையில்
நடந்து பார் ஆதவனே
ஆணும் பெண்ணும்
சரி நிகர் சமம்
என்னும் பாரதியின்
கனவு
உயிர் கொண்டு
வென்று கொண்டிருப்பதை
முந்தி வந்து
பார் ஆதவனே
பாரதி
நீ காணத் துடித்த
இளைய பாரதம்
உனக்காய் காத்திருக்கிறது
ஒரு முறை
உயிர் பெற்று வா
போராட்ட தீயொன்று
கண்டேன்
அதை அங்கொரு
கரையிலோர்
சிறியதாய் கண்டேன்
வெந்து தனிந்தது
கடற்கரை
எங்கும் வெட்டி இடிக்குது
வாலிப மின்னல்
அரசை முட்டிப் பெய்யுது
தமிழ் உணர்வென்னும்
மா மழை
போராட்ட களத்தில்
குஞ்சென்றும்
மூப்பென்றும் உண்டோ
தீம் தரிகிட தீம்ம் தரிகிட தோம்
மாடு பிடித்தவர்களை
நாடு பிடிக்க
தூண்டிய பீட்டாவுக்கு நன்றி
காத்தால எழும்பிட்டு
ஜலத்துல அலம்பிட்டு
டிபன் ஷாப்ட்டு
ஷேமமா இருக்கும் நோக்கு
தமிழனின்
போக்கு புரியாது தான்
கோழை குணம்
உன்னை தனக்காய்
பொருக்கி எடுத்திருப்பது போல்
விரம்
எம்மை தனக்காய்
பொருக்கி எடுத்திருக்கிறது
உண்மை தான்
நீ சொல்வது சரியே
பறை அடித்து சொல்லுவோம்
பகை முடித்து வெல்லுவோம்
எழுவாய் தமிழா
உழுவாய் எருதாய்
களைகளை பிடுங்கி
எரித்து விட்டு
புது பூமி அமைப்பாய்