முதல் காதல்
அறியா வயதில் அறியாமல் பூத்தக் காதல்
நாணத்தின் அறிமுகம் கிடைத்த முதல் தருணம்,
பிஞ்சுக் குழந்தையின் பால் மனம் மாறா சிரிப்பை போல்
என் மனதில் பதிந்தது அவன் முகம்.
பெண்ணின் கடைக்கண் பார்வைக்கு மட்டுமல்ல,
ஆணின் பார்வைக்கும் ஈர்க்கும் சக்தி இருக்கத்தான் செய்கிறது!!
வாழ்வின் வடிவமே தெரியா வயதில்
இனி வாழ்வே அவனோடு எனத் தோன்றியது எதனால்?
வெறும் ஈர்ப்பு என்று மனம் சொல்ல
இல்லை இது காதல்தான் என தோழி சான்றளித்தாள்.
அறிவியல் படிக்க நேரம் கிடைக்கவில்லை,
நான் அறியாதவன் பற்றி யோசிக்கும்
நேரம் மட்டும் எப்படி கிடைத்தது?
முதல் பார்வைக்கு வெறுப்பு வந்தது,
இரண்டாம் பார்வைக்கு விருப்பு வந்தது,
அடுத்த பார்வைக்கு சிரிப்பு வந்தது,
அவன் சிரிப்பிற்கு என் பார்வை பதிலானது.
பார்வையும் பார்வையும் ஒரே அலைவரிசையில்
மௌனமாய் பேசிக் கொண்டது.
இருவர் தவிர வேறு யாருக்கும் அர்த்தம் புரியவில்லை.
தூது என்று அவன் தோழன் வர
பேயய் கண்டதாய் நான் மிரண்டு ஓடிய ஞாபகம்.
அவன் அத்தை மகளின் அக்னி பார்வையால்
சுட்ட காயங்கள் ஏராளம்.
பிடித்த எல்லாவற்றையும் கேட்ட பெற்றோரிடம்
அவனைப் பற்றி பேசக் கூட முடியாமல் போனது எதனால்?
சரியா தவறா என மனம் கலங்க
என் மூளை யோசிக்க முன்வந்தது,
மனதிற்கும் அறிவிற்கும் சண்டை வரவே
மனதை வீழ்த்த அறிவிற்கு அனுபவம் இன்றி போனது.
தூண்டிலில் மாட்டிய மீனாய் நான் இங்கு தவித்திருக்க,
நான் தூண்டிலே போடவில்லை, ஆயினும் அவனும் மாட்டிக்கொண்டதாய் செய்தி.
உணர்வெது உறவெது அர்த்தம் புரியவில்லை,
பாலெது நீரெது என பிரித்துப் பார்க்க நான் ஒன்றும் அன்னப்பறவையில்லையே!
இதுவரை இருவரும் சொல்லி கொண்டதில்லை,
இனியும் சொல்லும் வாய்ப்பு வாய்க்குமா எனத் தெரியவில்லை.
யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன்
சொல்லாத காதலில் வெற்றியென்ன தோல்வியென்ன!
சொல்லி தான் தெரியவேண்டிய அவசியமில்லை,
நீ சொல்லாமலே நான் உணர்ந்த முதல் காதலை....
நன்றி,
தமிழ் ப்ரியா