நாவாடும் நர்த்தனங்கள்
நாவாடும் நர்த்தனங்கள்....!
சாடிய சொற்களால் வாடி வதங்கி
பேடியாய் பின் இதழ்களுக்குள் பதுங்கி
பாடி படமெடுத்து ஆடி அரவமின்றி
சாடிக்குள் முடங்கிய அரவமாய் நாவு.....
கதைகதையாய் கண்டு கதைத்துவிட்டு
கதைப்போரையும் கதி கலங்கவிட்டு
சிதைக்கு ஒத்தோர்க்கு சதையம் பாடி
சதை பிண்டமான சவ நாவு......
உறுதுணை நின்ற உறுதியற்ற உதடுகள்
உணர்வற்று உதிர்க்கும் புன்னகைப் போர்வை
மதியொளி மறைக்கும் முகிலினமாகி
சதிசூழ் உள்ளத்தை பிரதிபலிக்கும்
சேதி அறியாததாய் பாசாங்கு செவிகள்
பாராது மருளும் பனித்திரை விழிகள்
ஓடாக உடைந்த கண்ணாடிச்சில் மனதில்
கோடானக் கோடி பிம்பங்கள் காட்டும்
நாவாடும் நயன நர்த்தனங்கள்
பாபாடும் பாவலர்க்கு கீர்த்தனங்கள்
நயவஞ்சகம் நஞ்சாய் அதில் தோய்ந்தால்
பிரபஞ்சப் பிரளையம் வழிவாய்ப்பாகும்!
கவிதாயினி அமுதா பொற்கொடி