புன்னகையில் போர்ப்புரியும் விண்நகையாளே
புன்னகையில் போர்ப்புரியும் விண்நகையாளே!
கண்களிலே இயல்கமழும் கயல்விழியாளே!
கன்னங்களைக் கிள்ளத்தோன்றும் பனிமலராளே!
தீண்டிவிட எண்ணவைக்கும் நனிஇதழாளே!
குரல்களிலே நனைத்துவிடும் மென்பனியாளே!
கொலுசுகளால் வருடிவிடும் இன்னிசையாளே!
மையினிலே மசியவைக்கும் இமையழகாளே!
மையினையே தோற்கவைக்கும் கார்குழலாளே!
நட்டுவைத்த மலர்ச் செடியின் நறுமுகையாளே!
கசந்துவிடும் காலங்களில் தேன்மலராளே!
இமைகளிலே பேசிவிடும் யாழ்மொழியாளே! - என்
இரவுகளை இன்பமாக்கும் இயல்மொழியாளே!
கண்டவுடன் கலந்துவிடும் கதிரொளியாளே! -என்
இருண்டுவிட்ட தனிமையிலே நிலவொளியாளே!
நினைவுகளில் நிறைந்துவிட்ட வெண்முகிலாளே! - நான்
மறந்துவிட எண்ணுகையில் இடியிசையாளே!
போதையிலே ஊறவைக்கும் மதுவிழியாளே!- நான்
மீண்டுவர எண்ணுகையில் அலர்விழியாளே!
எண்ணங்களை எழுதவைக்கும் தமிழ்மொழியாளே!- நான்
பேசிவிட மறுத்துவிட்ட மான்விழியாளே!
இழந்துவிடும் என்றறிந்தும் - நான்
மறந்துவிட எண்ணாத முழுமதியாளே!
நீ வாழி! நின் குலம் வாழி!
நீங்கா புகழ்பெற்று நெடுவாழி!