யாரடியோ

கட்டழகு பெட்டகமே ! கன்னியருள் தாரகையே !
வட்டமிடும் கள்வன்யார்? வண்டுவிழி மருளுவதேன் ?
எட்டியெட்டிப் பார்ப்பதென்ன? ஏக்கமுடன் சோர்ந்ததென்ன ?
வெட்கமென்ன பெண்ணிலவே மெல்லவந்து சொல்லிடடி !

நதிக்கரையின் ஓரத்திலே நடமாடும் வாலிபனோ ?
மதிசிந்தும் ஒளியினிலே மயங்கிடத்தான் வைத்தானோ ?
அதிரூப மன்மதனோ ? அழகிலுனைக் கவர்ந்தவனோ ?
புதிராக உள்ளதடி! புரியவைப்பாய் பிரியசகி !

நெஞ்சமள்ளிச் சென்றானோ? நிம்மதியைக் குலைத்தானோ ?
கொஞ்சலுடன் பேசியுன்னைக் கொள்ளைகொண்டு விட்டானோ?
அஞ்சாதே என்றுசொல்லி அள்ளிமுத்தம் தந்தானோ ?
சஞ்சலமும் ஏனடியோ ? சட்டென்று கூறடியோ ?

சந்தனத்தில் பொட்டுவைத்த தங்கமகன் அவன்தானோ
சொந்தமுனைக் கொண்டிடவே சுற்றிவந்த சுந்தரனோ ?
தந்திரமென் செய்தானோ ? சம்மதம்நீ சொன்னாயோ?
வந்தவனைக் காட்டெனக்கு மணம்பேசி முடித்திடுவோம் !!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Feb-17, 9:42 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 72

மேலே