உனையன்றி வேறோன்றும் அறியேன்
எதுவரை என் பயணம் என்று அறியேன், ஆனால்
இறுதிவரை உன் துணை போதும் என்று அறிவேன்.
கண்ணீர் துளிகள் துடைக்க விரல்கள் தேவை இல்லை,
என் விரல் கோர்த்திட உன் கரங்கள் வேண்டும் எனக்கு.
ஒருநாள் ஒரு பொழுதேனும் உன் மலர்ந்த முகம்
எனை நோக்கி சிரித்திருந்தால் அகம் மகிழ்ந்திருப்பேன்.
உன் திருவாய் மொழி கேளாத இந்த விடுமுறை நாட்கள்
என் வாழ்நாட்களை குறைத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறிவாயா?
தோள்களை உரசி என் அருகில் நீ அமர தேவையில்லை,
உனை கடக்கும் தருணம் என் நாசிகள் உன் வாசனை உணர்ந்த நொடியே போதும்.
உடுத்தும் நிறங்களும் உன் கண்களை உறுத்த வேண்டிய கட்டாயம்,
அப்படியேனும் உன் பார்வை என் மீது விழட்டும்.
துடிக்கும் ஒரு இதயமும் உன்னுள் இருந்தே
எனை வாழ செய்யட்டும்.
நீ இதயமும் இல்லாதவன் என்பதை நீ என் இதயத்தை திருடிய போதுதான் அறிந்தேன்.
காத்திருந்தது என் அடிகள் வேர்விட தொடங்கியாயிற்று,
இனியும் தாமதத்தால் எனை உரமாக்கிடும் எண்ணமோ உமக்கு?
என் காதல் செடிக்கு நீர்விடுவாய் என்று காத்திருப்பேன் என்று எண்ணாதே,
உன் வீட்த்தோட்ட பூவையல்ல நான்.
கானகம் கடந்து எம்பாரதி தேடிய கவிக்குயிலின் இரையாகிய கனியின் விதையாவேன்.
தேடி வந்தவள் என ஏளனமாக நினையாதே,
காட்டு மல்லியின் மணம் உன் காகித மலர்கள் தராது.
வஞ்சியிவள் நெஞ்சம் கவர்ந்த கள்வனே,
இவள் இன்னல் களையும் வழி உன் ஒருவனுக்கே தெரியும்.
சூரியன் ஒளி தந்தும் நிலவு பூமியைத் தான் சுற்றிவரும்,
நான் வாழ ஆயிரம் காரணம், ஆயினும் உனையன்றி வேறோன்றும் அறியேன் நான்.