சீதனவில்

.........................சீதனவில்............................

அழகோவியமாய் அவளைப் படைத்த பிரம்மன் அவளுக்கானவனை மட்டும் செதுக்கிட மறந்துவிட்டான் போலும்....!

சீதை இவளும் சீதன வில்லுடைத்து அழைத்துச் சென்றிட ராமன் வருவான் எனும் நம்பிக்கையில் காத்திருக்கிறாள் இன்றுவரை...!

தனுமாதம் கடந்தால் இவளுக்கோ வயது நாற்பது
முதுமையின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்துவிட்டாள்
ஆனால் அம்மி மிதிக்கும் நேரம் தான் குறிக்கவில்லை இன்னும்...!

வெள்ளை முடி ஐந்தாறு எட்டிப்பார்க்க வெண்ணிலா இவளும் தேய்கிறாள் தினந்தோறும்...
கண்ணீர் மட்டுமே நிரந்தர முகவரியாய் ஒட்டிக் கொள்கிறது இவளோடு....!

சொர்க்கத்தின் பத்திரிகை அச்சடிக்கவில்லை போல் இவள் பெயரினை
திருமணச்சந்தையிலோ கோடிகளைக் கொட்டிக் கொடுத்தால் போதும் மணமகளாய் இவள் பெயருமாகும் திருமணப் பத்திரிகையில்...!

ஏழையின் வீட்டில் பிறந்ததால் கிட்டவில்லை ஆயிரம் காலத்துப் பந்தம்...
கன்னி கழியாமல் இருக்கிறாள் கருவினைச் சுமக்கும் வயதில் முதிர்கன்னிப் பட்டத்தைச் சுமந்து கொண்டு...!

எழுதியவர் : அன்புடன் சகி (8-Feb-17, 8:50 pm)
பார்வை : 388

மேலே