உத்தமப்பத்தினி
ப்ரதிஷ்டானபுரம் என்ற நகரத்தில் கௌசிகர் என்ற ஒரு அந்தணர் வசித்து வந்தார். சிறு வயதிலேயே அவருக்கு விவாஹம் ஆகிவிட்டது. அவருடைய மனைவியின் பெயர் சண்டிலி. பூர்வ ஜென்ம வினையினால் கௌசிகனுக்கு தொழுநோய் பற்றி விட்டது. அவருடைய மனைவி சாண்டிலி மிகவும் துக்கித்தாள். அவள் தன் கடமையை உணர்ந்து எந்த குறையுமில்லாமல் தன்னுடைய கணவனுக்கு பணிவிடை செய்து வந்தாள். தன் கடமையில் மிகவும் உறுதியாக இருந்தாள்.
கணவனுக்குப் முன் உறங்கி முன்பாக எழுந்து அன்றாட காரியங்களை செய்யத் தொடங்குவாள். கணவனை வெந்நீரால் ஸ்நானம் செய்வித்து உடலில் உள்ள ரணங்களை இனிமையாக பேசிக்கொண்டே துடைத்து மருந்திடுவாள். மிக அன்புடன் ஆஹாரத்தை ஊட்டி விடுவாள். நாளுக்கு நாள் கௌசிகனுக்கு நோய் அதிகமாகிக் கொண்டிருந்தது. வியாதியின் காரணமாகவும். பலக்குறைவினாலும் அவனுக்கு கோபம் அடிக்கடி வரும். சில சமயங்களில் தன் மனைவியை அடிப்பான். ஆனால் அவள் மனம் கோணாமல் தாயை போல் அவனுக்கு அன்புடன் பணிபுரிவாள். கணவன் உண்ட மிச்சத்தையே உண்பாள். கணவனின் சுகம் தான் தன்னுடைய லக்ஷியம் என்று அன்றாட காரியங்களை சோர்வில்லாமல் செய்து வந்தாள்.
அவளுடைய கணவனுக்கு சரீர உபாதை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அவன் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தன் உடம்பில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்களை ஒட்டிக்கொண்டிருந்தான். அப்போது அந்த தெரு வழியாக ஒரு அழகிய வேசி சென்றாள். அவளைப் பார்த்தவுடன் அவளை அடைய வேண்டும் என்ற காமம் அவனை பற்றியெரித்தது. அதை தன் மனைவியிடம் தெரிவித்தான். அவள் அவனிடம் ஹிதமாக பேசி அந்த எண்ணத்தை கைவிடுமாறு பிரார்த்தித்தாள். ஆனால் பலனில்லை. அவனுடைய ஆர்வம் அதிகமாகிக் கொண்டிருந்தது. பிடிவாதமும் மேலோங்கியது. அவன் அவளிடம் ” அவளிடம் என்னை கூட்டிக்கொண்டு போ! இல்லாவிட்டால் நாளை என்னை நீ உயிருடன் பார்க்க மாட்டாய் ” என்று பயமுறுத்தினான். கணவனின் உயிரை காப்பது மனைவியின் முக்கிய கடமையாதலால் அவள் வேறு வழியில்லாமல் கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு அகலமான கூடை ஒன்றில் துணிகளை மடித்துப்போட்டு கணவனை மெதுவாக தூக்கி அதில் உட்காரவைத்து அந்த கூடையை தன் தலையில் எடுத்துக் கொண்டு வேசியின் வீட்டை நோக்கி நடந்தாள். அது இரவு வேளை, பாதையில் வெளிச்சமில்லை. வேசியின் வீடு நகரத்திற்கு வெளியே இருந்தது. போகும் வழியில் (ஆணி) மாண்டவ்யர் என்ற முனிவர் கழு மரத்தில் கழுவேற்றப்பட்டிருந்தார். அவர் கால்கள் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தன.
சாண்டிலி செல்லும் போது கூடையிலிருக்கும் அவளுடைய கணவனின் தலை முனிவருடைய காலின் மீது மோதியது. முனிவருக்கு வலி பொறுக்க முடியவில்லை. அவர் கோபம் கொண்டு, ” எந்த பாபி என் மேல் மோதி எனக்கு அதிகமாக வலியை உண்டு பண்ணினானோ அவன் நாளை சூர்ய உதயமானவுடன் இறக்க கடவது! என சபித்தார். இதைக்கேட்ட சாண்டிலி மிகவும் பயந்தாள். அந்த உத்தமி. ” சூர்யன் உதித்தால் என் கணவன் இறப்பான். சூர்யன் உதிக்காவிட்டால அவன் இறக்மாட்டான். என்னுடைய மாங்கல்யம் பறிபோகாது. ஆகையால் சூர்யன் உதிக்காமல் இருக்கட்டும் “ என்றாள்.
உத்தமியின் வார்த்தைகள் முன்னால் சூர்யனின் ப்ரபாவம் எங்கே? சூர்யன் உதயமாகவில்லை. அந்தணர்களின் அநுஷ்டானங்கள் ஸ்தம்பித்துவிட்டது. உழவர்களின் வேலை தொடங்கவில்லை. ஜனங்கள் தவித்தார்கள். பயிர்கள் சூர்ய ஒளியில்லாமல் ஸோபையிழந்தன. வேள்விகள், திரு ஆராதனங்கள் நடைபெறவில்லை. தேவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஹவிர் பாகங்கள் வந்து சேரவில்லை. நாட்கள் கடந்தன. தேவர்கள் ப்ரம்மாவை அணுகி நடந்ததை கூறினார்கள். அவர் ” ஒரு உத்தம பத்தினியின் வார்த்தைகளால் சூர்யன் உதிக்கவில்லை. அவளுடைய வார்த்தைகளை மீறுவதற்கு எனக்கு கூட உரிமையில்லை. எனக்குத் தெரிந்த உபாயம் இதுதான். அத்ரி முனிவர் ஆசிரமத்திலிருக்கும் அனுசூயையிடம் முறையிடுங்கள். அவள் உங்கள் கவலையை போக்குவாள் ” என்றார்.
தேவர்கள் அத்ரி ஆச்ரமத்தையடைந்து தங்களது கவலையை தெரிவித்தார்கள். அனுசூயை தன் கணவரிடம் அநுமதி பெற்றுக்கொண்டு கௌசிக ப்ராஹ்மணனின் இல்லம் நோக்கி சென்றாள். வீடு தேடி வந்த ஸுமங்கலியை சாண்டிலி வரவேற்றாள். மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து வணங்கினாள். அவளுடைய அநுக்ரஹத்தை (தீர்க்க ஸுமங்கலி பவ) பெற்றுக் கொண்டாள். அனுசூயை சாண்டிலியை நோக்கி ” பெண் ஜென்மம் புனிதமானது. புருஷர்கள் சிரமப்பட்டு செய்யும் வேள்வி, தானம், தபஸ் எல்லாவற்றிற்கும் நாம் உறுதுணையாக இருந்து கொண்டே அதன் பலன்களில் பாதியை பெற்று விடுகிறோம். மேலும் பதி சுச்ரூஷை மூலம் மீதி பாதியையும் பெற்று விடுகிறோம்.
புத்ரன் குலத்தை கரையேற்றுகிறான். ஆனால் பெண் இரு குலத்தையும் கரையேற்றுகிறாள். நமக்கு கிடைத்த இந்த பெண் ஜென்மம் மிகச் சிறப்பானது. நீ உன் கணவனுக்கு மனம் கோணாமல் சேவை செய்து வருகிறாயா? என்றாள் சாண்டிலி ” கணவனுடைய சந்தோஷம் தான் மனைவிக்கு உகப்பு, பெண்களுக்கு கணவனை தவிர வேறு வ்ரதம் பூஜை ஒன்றுமில்லை. கணவருடைய அநுக்ரஹத்தால் கிடைக்காதது ஒன்றுமில்லை. நீங்கள் ஏன் வீடு தேடி வந்திருக்கிறீர்கள்? தங்களுக்கு நான் செய்ய வேண்டியது எதுவானாலும் கட்டளையிடுங்கள் “ என்றாள். அனுசூயை “ உன் வார்த்தைகளால் சூர்யன் உதயமாக வில்லை வைதீக கர்மாக்கள் நின்று விட்டன. ஜனங்களும் தேவர்களும் தவிக்கிறார்கள். நீ சூர்யனை உதயமாகும்படி உத்திரவிடு. நான் உன் கணவனை மறுபடியும் உயிர்பெறச் செய்கிறேன் “ என்றாள். சாண்டிலி சூர்யனை உதயமாக கட்டளையிட்டாள். சூர்யன் உதயமானான். கௌசிகன் உயிரற்று விழுந்தான்.
அனுசூயை தன்னுடைய பதிவ்ரதா பலத்தினால் கௌசிகளன எழுப்பினாள். கௌசிகன் உயிர் பெற்றான். அநுசூயை அவனை வியாதி அற்றவனாக செய்து அவர்களிருவரையும் அநுக்ரஹித்தாள். தேவர்கள், பூமாரி பொழிந்தார்கள். சாண்டிலி கணவனுடன் நீண்ட காலம் சகல ஸ்ரேபஸ்ஸுடன் வாழ்ந்தாள்.