கற்றது கைம்மண்ணளவு -சிறுகதை
![](https://eluthu.com/images/loading.gif)
பெரிய கூட்டஅரங்கு மக்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்த்து. அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் இலக்கிய சிறப்புரையாற்ற வேண்டி சிவானந்தம் வந்து அமர்ந்தார்.
சிறிது நேரத்தில் கூட்டம் ஆரம்பித்து இப்போது சிறப்புரையாற்ற ஆரம்பித்தார் அந்த புகழ்பெற்ற பேச்சாளாரான சிவானந்தம்.. அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில்….
”கூட்டத்திலிருந்து நீங்கள் என்னோடு போட்டியிட்டு வெல்ல முடியுமா ? நான் தயார் ! நீங்கள் தயாரா” என்று சவால் விட்டான் இளைஞன் சீனுவாசன்.
“டேய், யாருப்பா நீ ? என்று ஆளாளுக்கு விசாரிக்க….. ”அவன் இப்போதுதான் இலக்கிய உலகில் வந்துள்ளானாம் . சில பத்திரிகைகளில் அவனுடைய கவிதைகளும், சில பத்திரிகைகளில் சிறுகதைகளும் வெளியாகியுள்ளனவாம். கூட்டத்திலிருந்த ஒருவர் விவரம் சொன்னார்.
கூட்டத்திலிருந்தவர்கள் ”தம்பி சீப் ப ப்ளிசிடி தேடாதே” அவர் அனுபவம் என்ன ? உன் அனுபவம் என்ன ? ஒக்காருப்பா” குரல் கொடுத்தும் அந்த இளைஞன் மீண்டும் மீண்டும். “ அவருக்கு தைரியமிருந்தா போட்டிக்கு வரட்டுமே” என்று முரண்டு பிடித்தான்.
மேடையிலிருந்த பேச்சாளர், தம்பி “ நான் போட்டிக்கு தயார், ஆனால் இந்த மேடை வேண்டாம், இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம். நானே ஏற்பாடு செய்து விட்டு உன்னை அழைக்கிறேன். அதுவரை இன்றைய என்னுடைய பேச்சைக் கேட்டு விட்டு ஒரு நாள் என்னுடைய வீட்டிற்கு வா நாம் தனியாக உரையாடலாம் என்று அந்த நேரத்தில் சுமுகமாக முடித்தார்.
“. ஒரு பெரிய ஜாம்பவானிடம் நாம் போட்டி போட போகிறோம்” என்று சீனுவாசன் பெருமிதம் கொண்டான் அந்த பெருமித எண்ணத்தோடு இலக்கிய பேச்சாளர் சிவானந்தம் வீட்டுக் கதவைத் தட்டினான்.
அவரே வந்து கதவைத் திறந்து “வாப்பா தம்பி சீனு ! எப்படி இருக்கே நல்லாயிருக்கியா என்று நலம் விசாரித்து வீட்டிற்குள் அழைத்து போய் வரவேற்பறையில் அமர செய்தார்..
அவனுக்கு காபி தயார் செய்து எடுத்து வர அவரது மனைவியிடம் சொல்ல சமையலறைக்கு போனார்.
அந்த நேரத்தில்தான் இளைஞன் சீனுவின் கண்களில் டீபாயின் மேலிருந்த ஒரு புத்தகம் தென்பட்டது. அந்த புத்தகம் யாரோ படித்து கொண்டிருக்கிறார்கள் என அடையாளம் காண்பித்த்து. அவனுக்கு ஆச்சர்யமும் கூடவே அதிர்ச்சியாய் கூட இருந்த்து. ஏனென்றால் அவர் வீட்டில் சிறு பிள்ளைகள் இருப்பதாய் தெரியவில்லை.
“அவரே காபியை எடுத்து வந்து ”தம்பி சாப்பிடப்பா ” என்று உபசரித்தார். அப்போது, “ ஸார், இந்த புத்தகத்தை யார் படிக்கிறாங்க, ஒங்க வீட்டுல சிறிய பிள்ளைகள் இருக்கா” அப்படின்னு கேட்டான்.
“ சின்ன பிள்ளைகள் யாரும் இல்லைப்பா” அந்த புத்தகத்தை நான்தான் படிச்சிட்டிக்கிட்டிருந்தேன். நீ வரவே அப்படியே வைச்சிட்டேம்பா” என்றார் சிவானந்தம்.
“ஐயா, அவ்வளவு பெரிய கூட்டத்தில ஒங்க மதிப்பு தெரியாம, போட்டிக்கு வரீங்களா? ன்னு கேட்டேன் அது தப்புன்னு இப்போ உணர்ந்திட்டேன் ஐயா ! என்னை மன்னீச்சிடுங்கோ ” என்றான்.
எதுக்குப்பா ? மன்னிக்கணும் நான் போட்டிக்கு தயார்தான் என்றார் சிவானந்தம்.
இல்லை ஐயா, இலக்கிய உலகில் கொடிக்கட்டி பறக்கும் நீங்களே இன்னமும் நான்காம் வகுப்புக்கான பாடத்தை படிச்சிட்டிக்கிட்டிருக்கீங்க. அப்படின்னா, நான் இன்னும் எவ்வளவோ கத்துக்கணும்ங்கிற ஒங்க்கிட்ட கத்துகிட்டேன் ஐயா” என்று சொல்லி “ கற்றது கைம்மண்ணளவு” ன்னு பெரியவங்க சொல்றது எவ்வளுவு பெரிய உண்மை இப்பத்தான் புரிஞ்சுது என்று மனதிற்குள் எண்ணியவாறே வெளியேறினான்.
கவிஞர் கே. அசோகன்.