உழைப்பும் தன்னம்பிக்கையும்

உழைப்பும் தன்னம்பிக்கையும்!
=============================


எனக்ககவை எண்பதேயானாலும்..

எனக்குற்ற துணையென்று “உழைப்பு” ஒன்றுதான்!



என்கையே எனக்குதவியெனும் கருத்தில்..

என்மன உறுதி! இன்றைக்கும் எனைவாழவைக்கும்!



தள்ளாத வயதினில் சமுதாய மெனை...

தள்ளிவைப்பதாக யான்நினைத்தாலும்…



வெறுப்புற்று வாழ்வியலா நிலைகண்டுநான்..

விரக்தியுற்றுத் துவளும்மனம் கொண்டதில்லை!



முதியோரில்லம் சேர்ந்தங்கொரு கோடியில்..

முடங்கி உறங்கி சுருங்கிக் கிடக்கவும் விரும்பவில்லை!



மனிதரிலே மனிதராக நானும் பிறந்தேன்!

இளமைமுதல் மானத்தோடு வாழ்வதிலே முயன்று முதியவனானேன்!



“சோம்பித் திரிவர் தேம்பித் திரிவர்”!

“சோம்ப லிளமையில்” – “வறுமைமுதுமையில்”- யென்கிற..



பழமொழியின் உட்பொருள்தனை யறிந்துநம்..

மனதை வழக்கப்படுத்தி நலம்வாழ முயற்சி செய்தால்..



பந்தங்களும் சொந்தங்களும் உதவாத போதும்நம்..

பரிதாப நிலைகண்டொரு நாளும்பதற வேண்டியதில்லை!



சிற்பம்தனில் ஒளிந்திருக்கும் சிறு உளியின்சக்திபோல..

உடம்பினுள் ஒளிந்திருக்கும் உன்னதசக்தி நீயறிந்தால்!



காலிழந்த நங்கையொருத்தி சிகரம்ஏறிய சாதனைபோல..

நீயிழந்த நம்பிக்கை மீண்டுமெழ – நீயுமுண்டு வரலாற்றில்!



பிறக்கும் போது தொட்டிலில் தொடங்கிய வாழ்க்கையை..

இறக்கும்வரைக் கட்டிலில் வீழ்ந்துவாழ மனமில்லை!



இளமையில் சேர்த்ததெல்லாம் எனைவிட்டு விலகினாலும்..

உழைக்குமெண்ணம் முதுமையிலும் விலகவில்லை!



உழைப்பவர் போலசிலர் வேடந்தான் போடுகின்றார்!

உண்மைஅறிந்து கொண்டபின்னே வெறுப்புதான் மிஞ்சும்!



எண்பது வயதானாலும் உழைப்பயறாத..

என்முதுகில் கூன்விழ மறுப்பது இயற்கையன்றோ!



நாளிதழ் தினமும் படிக்கின்றேன் கண்ணொளி இன்னும் மங்கவில்லை!

நலமுடன்வாழ நானிலத்தில் நானின்றும் உழைக்கின்றேன்!



“நாடிவரும் அதிர்ஷ்ட மெனநினைத்து” உழைக்கமுயற்சி யிலையெனில்…

ஓடிவிடும் உடல்நலம் வீணாய் நமைவிட்டு ...ஒப்பி நானும்



தளராது தன்னம்பிக்கையில்…தெரிந்தகைத் தொழில்செய்து

அயராது உழைத்தினிதே வாழ்வேன்அகவை நூறானாலும்!



உட்கார்ந்த இடத்தினிலே, வயதான காலத்திலும்..

உயர்வான எண்ணத்திலே, ஒருவருக்கும் தீங்கின்றி..



வேளையொரு சோற்றுக்குப் பிறரைவேண்டி வாழாமல்..

சைக்கிளுக்குக் காற்றடித்துப் பஞ்சர் ஒட்டிஉழைத்துப் பிழைப்பேன்!

======================
இந்த வாரம்..வல்லமை மின் இதழ் நடத்திய 98 படக்கவிதை போட்டியில் சிறந்த கவிதையாகவும், கவிஞராகவும் தேர்ச்சி பெற்றது என் கவிதை.

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (13-Feb-17, 7:59 pm)
பார்வை : 133

மேலே