பண்பாடு, கலாச்சாரம் - ஒரு சிந்தனை

பெண்கள் தங்கநகைகளை விரும்பி அணிவார்கள்..
எதற்காக விரும்பி அணிகிறார்கள் என்று கேட்டால் அழகுக்காக, பெருமைக்காக, கௌரவத்திற்காகவென்று அடிக்கிக் கொண்டே செல்வார்கள்...
அந்த தங்க நகைகளை எப்போதும் அணிவார்களா? என்றால் அணிய மாட்டார்கள்...
தேவைப்பட்டால், ஏதாவது கல்யாணத்திற்கு, சுப காரியங்களுக்குச் சென்றால் மட்டுமே அணிவது வழக்கம்...
இதைப்பற்றி நான் ஏன் கூறுகிறேன் என்றால் நம்மில் பலர் இந்த தங்கநகையைப் போன்ற பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை வெறும் பெருமைக்காக கடைப்பிடிக்கிறோம்...
அது மிகவும் தவறான புரிதல்...
ஏனென்றால் நாம் பின்பற்றும் பண்பாடு, கலாச்சாரம் தான் நம் வாழ்க்கை என்று நாம் உணரவில்லை...
பண்பாடு, கலாச்சாரமென வாய் கிழிய பேசிவிட்டு, அதைச் சில நேரங்களிலும் பின்பற்றுவதும்,
பல நேரங்களில் ஒதுக்கிவிடுவதும் எவ்வளவு கேவலமான செயல் என்று அறிவீர்களா???...

பண்பாடு, கலாச்சாரம் என்ற வார்த்தைகளும், அறநெறிகளும் வெறும் பெருமைக்கானவை மட்டுமல்ல...
அவைதான் வாழ்க்கை...

வார்த்தைகளால் ஒருவர் , " ஒருவனுக்கு ஒருத்தி ", என்று கூறிவிட்டு, திரைமறைவில் பல பெண்களோடு வாழ்கிறாரென்றால் அதைவிட கேவலமான செயலேதும் உண்டா???...

நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் தான் நம் வாழ்க்கை...
அப்படியெனில் நம் பின்பற்றும் கலாச்சாரம், பண்பாடு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? என்பதை சிந்திக்க வேண்டியதும் முக்கியமல்லவா....

சரி, வாருங்கள்... அதைப்பற்றியும் சிந்தித்துத் தெளிவு பெறுவோம்...

ஆதிமனிதன் ஆடையின்றி அலைந்து வாழ்ந்தான்.
அதுவும் ஒரு பண்பாடுதான்..
அதற்காக அதை நாம் பின்பற்ற இயலுமா?
அவ்வாறு பின்பற்றினால் சமுதாயத்தில் என்ன நிகழும்?? என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்...

பண்டைய காலத்தில் அரசர்கள் பல திருமணங்கள் செய்வார்கள்..
அவர்கள் இன்பமாக வாழ தங்களுடைய அரண்மனையில் அந்தப்புரம் வைத்திருப்பார்கள்...
மது உண்டு மகிழ்வார்கள்...
அதுவும் ஒரு பண்பாடுதான்..
கலாச்சாரம் தான்...
அதற்காக அதை நாம் பின்பற்றலாமா???...
கூடாது...

ஒரு காலத்தில் மனிதர்கள் சிந்திப்பதே குற்றமென்று கூறி அதற்கு தண்டனையும் வழங்கினார்கள்..
அதைக் கலாச்சாரம், பண்பாடென பின்பற்றலாமா???..

கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுதல், பெண் சிசுக் கொலை என்ற கொடுமையான செயல்களெல்லாம் கலாச்சாரம், பண்பாடென்ற பெயரில் உலக வரலாற்றில் அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன...
அவற்றையெல்லாம் நாம் பண்பாடு, கலாச்சாரமாகப் பின்பற்றலாமா????...
கூடாது...

வரலாற்றை ஆராய்ந்தால் எண்ணற்ற மனிதத்தன்மையற்ற செயல்கள் தான் பண்பாடு, கலாச்சாரமென அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன...
அவற்றையெல்லாம் எடுத்துரைத்து விளம்பரம் செய்வதற்காக நாம் இக்கட்டுரையைச் சிந்திக்கவில்லை...
எழுதவில்லை...

நாம் பின்பற்றும் கலாச்சாரம், பண்பாடு சக உயிர்களையும், குற்றமில்லாத உணர்வுகளையும் மதிப்பதாக இருக்க வேண்டும்...
பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஒழுக்கத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும்...

சாதி, மதம், இனம், மொழி, நாடு போன்ற வேற்றுமைகள் முற்றிலும் நீக்கப்பட்ட கலாச்சாரம், பண்பாட்டை பின்பற்ற வேண்டும்...

அன்பால், கருணையால் மனித சமுதாயம் இயற்கையோடு ஒன்றி வாழ்தல் வேண்டும்...

தனக்கு குடிதண்ணீர் எவ்வளவு இன்றியமையாததோ, அதுபோல தான் சக உயிருக்கும் குடிதண்ணீர் இன்றியமையாததாக இருக்குமென்ற உணர்வு ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்...

அத்தியாவசியத் தேவைகள் மறுப்பின்றி யாவருக்கும் கிடைக்கப் பெறுதல் வேண்டும்...
ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பொய் போன்ற குற்றங்களுக்குச் சிறிதும் இடமளிக்காத பண்பாடு, கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும்...

வியாபாரத்திற்காகக் கூட தீங்கு விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்தல் கூடாது..
உற்பத்தி செய்தல் கூடாது....

பொழுதுபோக்கிற்காகக் கூட பண்பாடு, கலாச்சாரத்தை மீறும் திரைப்படங்களை திரையிடுதல் கூடாது...
நல்ல பகுத்தறிவின் துணையோடு நல்லதொரு பண்பாடு, கலாச்சாரத்தை முதலில் வடிவமைக்க வேண்டியதும் நம்முடைய அவசியத் தேவையாகிறது....

நல்லதொரு பண்பாடு, கலாச்சாரமே நல்லதொரு மனித சமுதாயம் காண அடித்தளமிடும்...
ஏனெனில் முன்பே கூறியிருக்கிறேன்,
நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் தான் நம் வாழ்க்கையென்று...
ஒருவேளை நம்முடைய கலாச்சாரம், பண்பாடு தவறான செயல்களால் நிறைந்திருப்பின் நம் வாழ்க்கையும் தவறானதாகவே இருக்கும்...

அன்பு சகோதர, சகோதரிகளே! சிந்தித்துச் செயல்படுங்கள்...
வாழ்க வளமுடன்...
வாழ்க நலமுடன்...
நன்றிகள்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Feb-17, 8:44 pm)
பார்வை : 4486

சிறந்த கட்டுரைகள்

மேலே