அம்மா எனும் அதிசயம்

அம்மா ' என்னும் சொல்லில்தான்
அகிலம் முழுதும் அடங்கிவிடும்
மகவாய் நானும் பிறப்பதற்கே
மகிமை பலவும் செய்தாயே .


அன்னை உன்னை வணங்குவதில்
அகமும் முகமும் மலர்கின்றேன் .
என்னை ஈன்ற தாயன்றோ?
எதிலும் உனக்கு நிகருண்டோ ?


அன்பும் பண்பும் புகட்டினாய்
அன்னை உன்னை என்றும்நான்
மறவா நிலையை எனக்கருள
மன்றில் உன்னை வேண்டுகின்றேன் .


நன்றி பலநாள் கூறிடினும்
நயந்தே நானும் நடந்திடினும்
நேயம் கொண்டு எனைவளர்த்த
நேசந் தனக்கு ஈடாமோ ?


உந்தன் அன்பு கிட்டிடிலோ
உயரும் எந்தன் வாழ்வுமன்றோ ?
இமயம் கூட எட்டிவிடும் .
இயல்பும் எனக்கு வாய்த்துவிடும்.


உதிரந் தன்னை உணவாக்கி
உண்மை அன்பை உணர்வாக்கி
உதிரா வண்ணம் வளர்த்தென்னை
உலகம் அறிய செய்திட்டாய் .


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Feb-17, 4:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 218

மேலே