வீட்டிற்கு வந்தாலே சண்டை தான்

கல்லூரியை முடித்து விட்டு மிகவும் சோர்வுடன் வீடு திரும்பினேன். அப்பொழுது மணி மாலை 6 ஆனது. என் அம்மா டிவியில் சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். என் அம்மா ஒரு சீரியல் பைத்தியம் என்றே சொல்லலாம், ஏனென்றால் கரண்ட் கட் ஆனாலும் டிவியில் டார்ச் அடிச்சி பார்ப்பார்கள்.

அம்மாவிடம் காபி கேட்டேன். சீரியலை மும்முரமாக பார்த்துக்கொண்டு இருந்ததால், நான் சொல்வதை கவனிக்கவில்லை. கோபமாக காபி கொடு என்று கத்தினேன். அம்மா சமயலறைக்கு சென்றார்கள். டம்பளர் மட்டும் பறந்து வந்தது. டம்பளரை எடுத்துக்கொண்டு நானே காபி ஊற்றி குடித்துவிட்டேன்.

சிறிது நேரம் கழித்து அப்பா வீட்டிற்கு வந்தார். அம்மா சீரியல் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். "சாப்பிட ஏதாவது செய்து தா" என்று அப்பா அம்மாவிடம் கேட்டார். காபி கேட்ட எனக்கே டம்பளர் பறந்தது என்றால் அப்பாவிற்கு என்ன என்று ஆவலாக காத்துக்கொண்டு இருந்தேன். அப்பாவும் கோபமாக கத்தினார், அம்மா சமயலறைக்கு சென்றார்.

என்ன பறந்து வரப்போகிறது என்று சமையலறையை பார்த்துக்கொண்டு இருந்தேன். அம்மா, அப்பாவிற்கு சாப்பாடு எடுத்து வந்து போட்டார்கள். அதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன், ஆனால் அந்த அதிர்ச்சி ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. அந்த சாப்பாட்டில் அம்மா என்ன கலந்தார்கள் என்பது தெரியவில்லை. இரண்டு வாய்க்கு மேல் அப்பாவால் அதை சாப்பிட முடியவில்லை. அப்பாவின் கண்களில் அருவி போல் நீர் கொட்ட துவங்கியது.

இரவு பொழுது வந்தது. சாப்பிட வருமாறு அம்மா அழைத்தார்கள். சாப்பிடுவதற்கு சென்றேன். உப்புமா செய்து வைத்து இருந்தார்கள். இந்த உலகதில்லையே எனக்கு பிடிக்காதா உணவு உப்புமா தான். இதற்கு சட்னியும் செய்து வைத்தார்கள்.

அப்பாவுக்கும் உப்புமா பிடிக்காது. ஆனால் அம்மா தினமும் இரவு அதை தான் செய்வார்கள். இதனால் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தினமும் சண்டை நடக்கும். இருந்தாலும் அம்மா செய்வதை சாப்பிட்டு தான் ஆகவேண்டும். ஏனென்றால் வேறு சாப்பாடு இல்லை. சாப்பிட்டு தூங்க சென்று விட்டேன்.

நான் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது திடீரென்று ஒரு குரல் "டேய் கழுத எந்திரி டா மணி 9 ஆகுது, காலேஜ்-க்கு போலியா" என்று அம்மா கத்தினார்கள். மணி ஒன்பதா என்று நானும் அலறி அடித்துக்கொண்டு எழுந்து கடிகாரத்தை பார்த்தேன் மணி 7 தான் ஆனது. காலையிலே கோபமாக்கி விட்டார்கள் என்னை.

கல்லூரிக்கு கிளம்ப தயார் ஆனேன். காலை உணவை சாப்பிட உட்கார்ந்தேன். என் அம்மா சுட சுட ஆவி பறக்க எனக்கு பிடித்த இட்லியை எடுத்துவந்தார்கள். இட்லிக்கு மூன்று வகை சட்னி வைத்திருந்தார்கள். மூன்று வகை சட்னியா என்று நீங்கள் ஆச்சிரியப்படலாம் ஆனால் அது தவறு "ஒன்று நேற்று இரவு வைத்தது, மற்றோண்டு நேற்று காலை வைத்தது, இன்னொன்று நேற்றுக்கு முன்னாள் வைத்தது"

என் அம்மா நாளைக்கும் சேர்த்து இன்றே சமைக்கும் வல்லமை பெற்று இருக்கிறாள் என்பது எனக்கு புரிந்தது. அந்த சட்னியை பார்த்ததும் இட்லி சாப்பிடும் எண்ணமே போய்விட்டது. எனக்கு பசி அதிகமாக இருந்ததால் இட்லியை திண்றாக வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். அதை சாப்பிட்டு கல்லூரிக்கு சென்று, முடித்து விட்டு மாலை வீடு திரும்பினேன்.

வீட்டிற்கு சென்றவுடன் திரும்பவும் டம்பளர் பறந்தது. சண்டை நடந்தது. நானும் என் அப்பாவும் வீட்டிற்கு வந்தாலே சண்டை தான் நடக்கும். இதுவே எங்கள் வாழ்க்கையாக இருக்கிறது. இது எங்கள் குடும்பத்தில் நடக்கும் முடிவில்லா போர்.

எழுதியவர் : சரவணன் (28-Feb-17, 12:15 pm)
சேர்த்தது : சரவணன்
பார்வை : 1836

மேலே