ஏற்றிடுமோ அச் சாமியதும் - - - குடமுழுக்கு விழாக்கள் ஒரு பார்வை - - - - சக்கரைவசன்

ஏற்றிடுமோ அச் " சாமியதும் "
********************************************************

( தற்கால ஆலய குடமுழுக்கு விழாக்கள் - - - ஒரு பார்வை )---
*****************




செந்தேளும் கரும்பாம்பும் சேர்ந்தே நல்வாழச்
செல்லரித்த உத்திரங்கள் ஒன்றொன்றாய் கீழவிழப்
பொந்துகளின் உள்புகுந்து குஞ்சுகள் புடைசூழ
வந்தாளும் எலிகளதன் கூடாரமாய் மாறிவிட்ட
நந்தியுடன் காட்சியுறும் வழிபாட்டுக் கலையகங்கள்
உந்தும்வழி ஏதுமின்றி நொந்தபடி இருக்கையிலே

வந்தவரைக் குளியாட்டி வந்தவரை பணம் தேற்றி
சந்துவழிப் பாதைதனை சிந்தையின்றி வழிமறித்து
காந்தமுனை திசைகாட்ட கருங்கல்லில் கட்டமைத்து
மந்திரப் பீடமிட்டு கருப்பனைச் சிறையிட்டு
சந்தனத்தில் கதவமைத்து தந்தத்தில் பிடிபோட்டு
வெந்த கல் தளமிட்டு ஆறுவேளை வேள்வியிட்டு

அந்தணரின் தந்திரமோ கருடனை வரவழைக்க
சுந்தரக் கலசங்கள் புனிதநீர் கண்டவுடன்
சொந்தங்கள் புடைசூழ பந்தாவாய் பலபேசி
முந்திவந்து உட்கார்ந்து பந்தியிலே இடம்பிடித்து
குந்தகம் இல்லாது ஒன்றுகூடி விருந்துண்ண = நற்
பாந்தமாய் குடமுழுக்கு விழாவதும் நிறைவேற

சாயங்கால நேரம்வர சாயும்கால நேரமுற
ஓயுங் களம் அது காண வேய்தளம் ஒன்றமைத்து
சாயக் களை தான்கொண்ட பாயுங்கலை சுந்தரிகள்
ஆய கலை குத்தாடி மாயவலை பலவீச

களைகட்டும் தளமதனில் தலைக்கட்டு கனவான்கள்
அலையென நல்திரண்டு சாயநிற மதுவருந்தி
பாயு( ம் )மான் கறியுண்டு ஊளையிட்டு வாய்சிரிக்க
ஓய்வுபெறும் விழாவதனை ஏற்றிடுமோ அச் " சாமியதும் " !


(இப்படைப்பு சமுதாயக் கண்ணோட்டத்திற்கே )

எழுதியவர் : சக்கரைவசன் (6-Mar-17, 5:22 pm)
பார்வை : 185

மேலே