வறட்சிக் கவிதை
கடும் வறட்சி
பசுமை மாறாமல் இருக்கிறது
காகிதப் பூக்கள்
மஞ்சள் நிலா
இடையில் வந்தாடுகிறது
அவள் கூந்தல்
அந்திச் சூரியன்
மெல்ல நிறம் மாறியது
கடல் நீர்
ஆழப்பதித்த சிலுவை
வலிபொறுத்தது
மரம்
கடும் வெயில்
பொறுமையாய் நகர்கிறது
மரநிழல்
ஆற்றங்கரை நாணல்
மெல்ல வளைந்து எழுகிறது
விஷநாகம்
முழுநிலவு
தேய்ந்து வருகிறது
ஊதியம்
உதிர்ந்த இலை
கீழே விழவில்லை
மரம்
வளர்ந்த மரம்
வேர் பிடித்திருக்கிறது
பாறை
குறுகிய நதி
அகண்டு விட்டது
இடைச் சொருகல்
குரைத்த நாய்
என் கழுத்தை பிடித்தது
குழந்தை
ஓடிய பாம்பு
மூச்சிறைக்கிறது
கூட்டம்
ஆற்றில் கிணறு
பல கீறல்களுடன் இருக்கிறது
பழனியும் சரிதாவும்
அகற்றப்பட்ட புதர்கள்
தவம் முடித்து எழுந்தது
அம்மனியம்மன் பாறை
ஆழ்துளைக் கிணறு
நூறாவது அடியில் வந்தது
காதில் இரத்தம்
கட்டியிருந்த தேன்கூடு
ஜன்னல் திறக்கையில் கொட்டுகிறது
மழை
வறட்சிக் கவிதை
கூரைவழி ஒழுகி வந்தது
முற்றுப்புள்ளி
வழிமாறிய யானைகள்
காடுகளுக்குள் விரட்டப்பட்டன
கட்டிடங்கள்
- கி.கவியரசன்