யாதுமாகிப் போனாய்
சோலைமலர் அவிழ்ந்து உறங்கும் பனியும் மறைந்து
காலைநேர தென்றலில் கலந்து வரும் பூவாசமாய்
சாலையில் குடையின்றி மழையில் நனையும் மல்லிகையாய்
மாலைநேரம் மனதினை உன்றன் நினைவு சுமக்குதே......
ஆழியின் அலையாய் நெஞ்சில் நித்தம் மோதினாய்
மேழியின் கூரான முனையில் இரத்தமின்றி கீறினாய்
நாழிகையும் விலகாது வேரும் மண்ணுமாய் மாறியும்
வாழிடம் வேண்டி துடிக்கும் இதயம் குடியேறினாய்......
பாறையும் உருகும் பாலைவன மணல் பரப்பில்
பனிமலை சேலையில் வருவதாய் நீயுமங்கு வந்து
பால்மதி ஒளிவீசி படரும் கொடியென தழுவி
பருகிடாது அமுது படைத்து எனைத் தேற்றினாய்......
ஊனுக்குள் உயிராய் நுழைந்து உலவி வருகிறாய்
தேனுக்குள் இருக்கும் இனிமையை இதழ்வழி தருகிறாய்
மானின் விழிகளில் நாளுமெனை மயங்க வைத்து
வேனில் மஞ்சம் ஒன்றை மடியில் விரிக்கிறாய்......

