அழகின் சிரிப்பு

வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் குடும்பத்தில், பெண் வாளிப்பான அழகோடு இருந்தால், அவளின் குடும்பத்துக்கே ஆபத்து” என்பது இயற்கையின் நியதி.

அந்த நியதிக்குட்பட்டவள்தான் கீதாஞ்சலி. வறுமை தாண்டவமாடியது. இருந்தாலும் அழகிருக்கிறது.

ஒரு வேளை சோற்றுக்கே திண்டாட்டம். பட்டினியால் கிடந்த அவளுக்கு….எப்படியோ வாய்ப்பும் கிடைத் த்து. அது மாடலிங்.

கொஞ்சகொஞ்சமாக மாடலிங்கில் சம்பாதிக்க ஆரம்பித்தாள். ஐநூறு ரூபாய் கிடைத்தால் அதற்கேற்ற செலவு, ஐயாயிரம் கிடைத்தால் அதற்கேற்ற செலவு செய்ய ஆரம்பித்தாள்.

பணமும், பேரும் பெருக துவங்கியது…கூடவே தமக்கு அழகிருக்கிறது என்ற அகந்தையும் கூடியது.

வாய்ப்புகள் பெருகி…. உலக அழகிகள் போட்டிகளில்…அவர்களோடு சரிசம மாக… புதுப்புது டிசைன்களில் கேட் வாக்கில் பவனி வந்தாள்.

உலக அழகிகளோடு உலா வந்தவள், மாலை வேளைகளில்….. மதுவின் பிடிக்குள் சிக்கினாள். பிறகு போதை வஸ்துகளுக்கு அடிமையாகி நாள் முழுவதும் போதையிலேயே மூழ்க துவங்கினாள்.

விழா அமைப்பாளர்களை போதையில் அலட்சியப்படுத்தினாள், அவமானப்படுத்தினாள். வாய்ப்புகள் மெல்ல…மெல்ல அவளை விட்டு நழுவிப் போயின.

வருமானம் குறைந்தது. மீண்டும் பழையபடியே வறுமை நிலைக்கு தள்ளப்பட்டாள். சாப்பிட உணவில்லை. ஆனால் பட்டினியிருந்தாலும், போதைப் பழக்கத்திலிருந்து அவளால் மீளமுடியாமல் தவித்தாள்.

போதைப் பழக்கத்திற்காக…அக்கம்பக்கத்தாரிடம் கையேந்தினாள்.

“ஆ”வென வாயைப் பிளந்து அதிசயமாய் பார்த்து மகிழ்ந்த அந்த அழகியை “த்து“வென துப்பி அவமானப்படுத்தினார்கள். அந்த அவமானமெல்லாம், போதைக்கு தெரியவில்லை.

அவளிருந்த வீட்டைக் காலி செய்ய வைத்தார்கள். அவளின் நடவடிக்கையால், அவள் பெற்ற குழந்தையோடு, அவளின் கணவன் கண்காணாத ஊருக்கு…சொல்லாமல்…கொள்ளாமல் போய்விட்டான்.

அவளுக்கு கணவனும், பெற்ற குழந்தையும் பெரிதாய் படவில்லை. போதை மட்டுமே பிரதானமாய் பட்டது.

வீடும் இல்லை, பாதைகளின் ஓரத்திலே கிழிந்த அழுக்கு துணியோடு வலம்வந்து மற்றவர்களிடம் கையேந்தி நின்றாள். விரட்டியடித்தார்கள்.

“நான் காசு தந்தால், நீ எனக்கு என்ன தருவாய்” என்று அர்த்த புஷ்டியோடு கேட்டவர்களுக்கு… பதிலாய் அவளையே தந்து… போதைக்குள் மூழ்கி கிடந்தாள்.

பாதையோரம் இருப்பவளை பந்தாடி பொது பூங்காவிற்குள் தள்ளினார்கள்.

“பொது பூங்காவில்….. மலர்களின் சிரிப்புகளுக்கிடையே….. வருவோர் போவோரிடம் கையேந்திக் கொண்டிருக்கிறாள் சிரித்த முகத்தோடு….. ….அது அழகின் சிரிப்பாக இல்லாமலிருக்கிறது.


கவிஞர் கே. அசோகன்.

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (28-Mar-17, 7:36 pm)
சேர்த்தது : கேஅசோகன்
Tanglish : azhakin sirippu
பார்வை : 535

மேலே