பாண்டவர்களின் இறுதி நாட்கள்

மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.
யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.
அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.
லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.
பின்தொடர்ந்த நாய்
மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.
பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”
சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் “சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். “தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.
அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.
தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். “உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.
ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.
மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.
விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.
அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் மறைந்தார்.

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (29-Mar-17, 7:58 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 569

மேலே