பச்சை நிலம்

பச்சை நிலம்
கவிதை by : பூ. சுப்ரமணியன்
‘கொக்கரக்கோ’ சேவல் கூவின
கண்மணிகளைக் காவல் காத்த
கண்இமைகள் திறந்தவுடன்
என் வீட்டுவாசலைத் திறந்து
நின்று பார்த்தேன் !
கண்ணுக்கெட்டிய தூரம்
எங்கும் பச்சைக் கம்பளம்
விரித்துப் போட்டது யார் ?
இயற்கை
விரித்த பச்சைநிலமா ?
பச்சை நிலத்தில் காணும்
பசுமை நாற்றின் நுனியில்
வைரக் கிரீடங்களாக
மார்கழி பனித்துளிகள் !
கலப்பையுடன் உழவர்கள்
கஞ்சிக்கலயத்துடன் பெண்கள்
கொஞ்சி விளையாடும் கிளிகள்
மகிழ்வுடன் பறக்கும் நாரைகள்
எல்லாமே பச்சை நிலத்திலே
நான்
கண்டு மகிழும்போது....
‘ வறட்சி நிவாரணம் வழங்கு ‘
விவசாயின் உரத்த குரல்
கேட்டு விழித்தேன்.
இறைவா !
எல்லாமே பகல் கனவு
எதிரே பார்த்தேன்
பச்சை நிலங்களெல்லாம்
பல மாடிக் கட்டிடங்களாக
விளைந்து நின்றன !
.