சரித்திரக் குறிப்புகள்

சரித்திரக் குறிப்புகள் (தமிழ்நாடு 2017 )

*
கவிதைகள் கசக்கின்றன
நிலங்கள் திரிகின்றன
தன்மானம் தலை குனிய
சரித்திரம் கைகொட்டிச் சிரிக்கிறது

பருவங்கள் இன்று
பொய்த்துப் போனாலும்,
---முன்னர் அவை
மாரிப் பொழிந்த
மழை நீர்க்காசுகளை
மண்ணின் வங்கியில்
சேர்த்துவைக்காமல் போனோம்
---நமக்கு நாமே
---அகதிகள் ஆனோம்

இயற்கை தன் இசை இழந்தது
அரசு செயலிழந்தது
காலம் வெறிச்சோடி
நின்ற இடத்திலேயே நிற்கிறது

உயிர்ப்பிக்கும் உழவர்கள்
உயிர் மாய்க்கும் போது
குற்ற உணர்ச்சியில் உயிர்
கூசுகிறது !

மக்கள் குறுஞ் செய்திகளைக்கூட
கவிதை நயங்களில் எழுதுகிறார்கள்
கவிஞர்கள் பலர் கவிதைகளைக்
குறுஞ் செய்திகளாகவும் ,
குப்பைகளாகவும்
கொட்டுகிறார்கள்

எல்லாம் இருந்தும்
திருவோடு ஏந்தி நிற்கிறாள்
தமிழ் அன்னை
ஒரு பிச்சைக்காரியைப் போல .

அவள் விலையில்லா
பொக்கிஷங்களை
அயோக்கிய பிள்ளைகள்
களவாடி மறைத்துவிட்டனர்.

அப்பிள்ளைகள்
அரசியல்வாதிகளாகவும்
உயர் அதிகாரிகளாகவும்
கொழிக்கிறார்கள்

எங்கள் அரசியல் வானில்
சந்திர சூரியர்கள்
மறைந்துவிட்டன
நம்பிக்கை விழிகளுக்கு
ஒரு நட்சத்திரமும் கூட
புலப்படவில்லை ......

கடற் கொள்ளை யாவது
எப்போதாவது நிகழும் -இந்தப்
பகற் கொள்ளையர்களிடம்
எப்போதும் சிக்கித்தவிக்கிறது
நாடு !

குடி மக்கள்
ஏங்கித் தவிக்கிறார்கள்
கோனுக்காக
ஒரே ஒரு கோனுக்காக...?

பருவங்கள் சிலிர்க்கும்
நிலங்கள் செழிக்கும்
தலைமை தோன்றும்
செங்கோல் ஊன்றும்
காலம் சிறக்கும் - எங்கள்
கவிதைகள் இனிக்கும்
என்ற தாய்மைக் கனவுகளோடு
ஓர் ஏழைக் கவிஞனின்
இந்தக் குறிப்பு நிறைகிறது
*
கவித்தாசபாபதி

எழுதியவர் : கவித்தாசபாபதி (12-Apr-17, 8:44 pm)
சேர்த்தது : கவித்தாசபாபதி
பார்வை : 102

மேலே