ஏதிதன் பெயரோ

படம் பார்த்துச் சொன்ன கவிதை

என்னடா சோதனை ?
ஏதிதன் பெயரோ ?

"மேலிருக்கும் தண்ணீரைக் குப்பை யாக்கி
. மெனக்கெட்டு கீழுறிஞ்சும் ஆழ்கு ழாயால்
பாலெனவே ஓடுகின்ற அடியின் நீரைப்
. பாழ்படவே உறிஞ்சுகிறார் அறிவில் லாதார் !
பாலத்தில் நீரின்றி இற்றை நாளில்
. படுவிரைவாய் வண்டிசெலும் மணலைத் தூக்கிக் !
காலத்தால் அடிநீர்தான் வற்றி விட்டால்
. காடழித்த மாந்தர்தான் என்செய் வாரோ ?"

என்றபடி பார்வையிலே எள்ளல் வைத்தும்
. என்றைக்கும் தீராத ஐயம் வைத்தும்
நின்றிருப்ப தத்தனையும் மாக்க ளல்ல
. நிஜமுறங்கும் நம்மனத்தின் சிலபிம் பங்கள் !
நன்றிதுவோ தீச்செயலா எண்ணக் கூட
. நமக்கிங்கே நேரமிலை ! ஒருநாள் பார்த்தால்
சென்றவழி வந்தவழி எல்லாம் தீயாய்ச்
. செத்திருக்கும் நாமிருப்போம் சவத்தைப் போல !

முடிந்தவரை மேல்மட்ட நீரை நாமும்
. முழுதாகக் கவனித்துக் காத்து வந்தால்
அடிநீரும் அழகாகக் சேர்ந்தி ருக்கும்
. அதுவங்கி தனில்போடும் முதலீட் டைப்போல் !
பிடிமானம் நம்வசமே இருக்கும் ! ஓர்நாள்
. பிழைப்புக்கே அதுவுதவும் ! அறிந்து யர்வோம் !
மடமைகள் செய்வதுதான் மனித நெஞ்சம்
. மதியாலே அதைத்திருத்தின் தெய்வம் பூண்போம் !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (12-Apr-17, 11:23 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 74

மேலே