சொல்வாய் பெண்ணே

சொல்வாய் பெண்ணே
சொல்ல வந்ததை
சொல்லாமல்
முற்றுப்புள்ளியால்
தன்னை முடித்துக்கொள்ளும்
அர்த்தமற்ற வார்த்தைகளா?
நம் காதல்!........

அன்று........
கண்களால் மனதில்
காதல் விதையை
புதைத்த நீ...
இன்று.......
வாழ்வைத் தேடும் கணம்
இதயத்தை தரிசாக்கி
ஏன் சென்றாய்?.....

அன்று......
பார்வைக் கீற்றால்
மின்னலாய் படர்ந்தவள்
இன்று....
உன் இழப்பால்
இடிதாங்கி ஆக்கிவிட்டாய்
என் இதயத்தை...

அன்று....
உன் பேச்சு வெள்ளத்தில்
மூழ்கியும் உயிர் தந்தவள்
இன்று...
ஏன் நினைவலைகளால்
மிதக்க வைக்கிறாய்
என் நடை பிணத்தை...

அன்று...
மணித்துளிகளும் கரைந்தனவே
நொடியாய் உன் வரவில்
இன்று...
யுகங்களைத் தின்றதாய்
நொடிகளும் நீட்டிக்கிறதே
தன் காலத்தை
உன் பிரிவில்...


அன்று...
வண்ணத்துப் பூச்சியின்
இறகமர்ந்த வண்ணமாய்
மகிழ்ந்த நம் காதல்
இன்று..
விளக்கில் விழுந்த
விட்டில் பூச்சியாய்
மாயுமுன்
சொல்வாய் பெண்ணே...............

எழுதியவர் : சு உமாதேவி (15-Apr-17, 11:07 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : solvaai penne
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே