மது விற்று கலாசாரம் வாங்கும் படையினர் சிந்தனைக்கு --படித்தது ---அனைத்து தமிழருக்கும் எச்சரிக்கை

யாழ்.குடாவில் சிங்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் என்றுமில்லாத அளவிற்கு பொருட்களின் விலைகள் உச்சமடைந்துள்ள நிலையில் இம்முறை புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்கள் தமக்கு எப்போது விடிவு கிடைக்கும் என்ற மனநிலையிலேயே இருக்கின்றனர் என்பதை அங்குள்ளவர்களோடு உரையாடியபோது அறியக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் அங்கு தமிழ் இளம் சமுதாயத்தை ஏற்கெனவே தமிழ் தேசிய சிந்தனைகளில் இருந்து திசைதிருப்பி வேறுபாதையில் செல்லவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவந்த சிங்களக் காடையர்கள், தற்போது மதுப்பாவனையை மேலும் மேலும் இளம் சமுதாயத்தினரிடையே பரப்பும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் வாயிலாக அறியக்கிடைத்துள்ளது.

இதனை யாழ் மதுவரி நிலையமும் அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது. அதாவது யாழ்ப்பாணத்தில் அதிகளவில் மது விற்பனையாகிக்கொண்டிருக்கின்றது என்றும் யாழ் நகரவாசிகளே அதிகளவு மதுபிரியர்கள் என்றும் மிக இளவயதினர் மதுபானத்திற்கு அடிமையாகியுள்ளதாகவும் யாழில் இருந்து வெளியிடப்பட்ட புள்ளிவிபரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 904 லீற்றர் மதுபான வகையும் பெப்ரவரியில் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 450 லீற்றர் மதுபான வகைகளும் விற்பனையாகியுள்ளன என்று பிரதம மதுவரிப் பரிசோதகர் என்.கிருபாகரன் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணத்துக்கு வரும் காலங்களில் மதுபான விற்பனை அதிகரிக்கின்றன.

சுமார் 10 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 15 ஆயிரம் லீற்றர் வரையில் இத்தகைய காலங்களில் அதிகரித்து விற்பனையாகின்றது. யாழ். மதுவரி நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை பனை மரங்கள் அதிகளவில் காணப்படுவதனால் அத்தகைய இடங்களில் கள்ளு விற்பனை அதிகளவில் இடம்பெறுகிறது.

சாராயம் மற்றும் ஏனைய மதுபான வகைகளின் விற்பனையை கள்ளின் விற்பனையும் தீர்மானிக்கிறது. தற்காலத்தில் வயது வந்தவர்களுக்கு நிகராக 21 வயதுக்குட்பட்ட மாணவர்களும் தாராளமாக மது பாவிக்கிறார்கள். கடைகளில் நின்று மது அருந்தாது ரின்கள் போத்தல்களாக வேண்டிச் சென்று வீதிச் சந்திகளில் வைத்து அருந்துகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன.

இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு நெடுங்கேணி மகாவித்தியாலய சிற்றூண்டிச்சாலையில் வைத்து சிறிலங்கா இராணுவத்தினர் பியர் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்ததாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டையடுத்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு வர்த்தகர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில், நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் இராணுவத்தரப்பினர் பியர் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை தமிழ் மக்களை விசனமடையச்செய்துள்ளது.

அங்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்த நிலையிலும் பாடசாலை விடுமுறை விடப்பட்டிருந்த தருணத்தையும் அவர்களுக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு இராணுவத்தினர் ஒரு கல்லில் இருமாங்காய் என இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் என அவதானிகள் தெரிவித்தனர்.

விற்பனை நடைபெற்ற இரண்டு நாட்களிலும் வயோதிபர்களைக் காட்டிலும் இளைஞர்களே அதிகளவில் இதற்கு அடிமையாகியிருந்ததனைக் காண முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இத்துடன் வழமையாக வியாபார நிலையங்களில் விற்பனை செய்யும் விலையிலும் பார்க்க 10 ரூபா குறைவாகவே விற்பனை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.

தமிழினத்தை அழிப்பதற்காக துடித்துக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு அன்று யுத்தத்தினைக் கையாண்டு தமிழ் மக்களின் உயிர்களை அழித்தது. தொடர்ந்தும் சமாதானம் என்ற போர்வையில் அரசு ஆட்சியைக் கொண்டு நடத்தினாலும் எதிர்கால சந்ததியை அழித்துவிட வேண்டும் என்ற நோக்கிலேயே செயற்பட்டு வருகின்றது. தற்போது தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் நடைபெறுகின்ற முக்கிய நிகழ்வுகளில் இராணுவம் இந்த வெறியாட்ட வியாபாரத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றது என்றும் யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் வெற்றி பெற்றவீரர்களுக்கு பரிசாக மதுபானப் போத்தல்கள் வழங்கப்பட்டதற்கு பெற்றோர்களும், கல்விச் சமூகத்தினரும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள மதுபான சாலைகளை மூடும் பெரும் முயற்சியில் அப் பகுதி மக்களும் பொது அமைப்புக்கள் மற்றும் கல்வி சமூகமும் பெரும் முயற்சிகளை எடுத்துவரும் இச் சந்தர்ப்பத்தில் சிறிலங்கா படையினரின் இவ்வாறான செயற்பாடுகள் மக்களை விசனமடைய வைத்துள்ளதாகவும், இளம் சமூகத்தினரை தமிழர்களுடைய அடிப்படைப் பாரம்பரியத்தில் இருந்து மாற்றும் மறைமுக நிகழ்ச்சியே மேற்படி விளையாட்டு நிகழ்ச்சி என்றும் வீரர்களது பெற்றோர்களும், கல்வி சமூகமும் கடும் விசனம் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

வன்னியில் அங்காங்கே படையினரின் கட்டுப்பாட்டில் மதுபான கடைகள் காணப்படும் நிலையில் மதுபான கடைகளில் இளைஞர்களை தூண்டும் வகையிலான செயற்பாடுகளிலும் கடனுக்கு மதுகொடுக்கும் நடவடிக்கையிலும் சிறீலங்காப்படையினர் ஈடுபட்டுள்ளார்கள். அது மட்டுமல்ல யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இராணுவ சாகச நிகழ்வில் இராணுவத்தினர் சாதாரண உடைகளில் பியர் கான் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிகழ்வுகளைக் காண வந்தவர்களில் அதிகளவானவர்கள் பாடசாலை மாணவர்களே இதனடிப்படையில் இவர்களது செயற்பாடுகள் பல கோணங்களில் சிந்திக்க வைப்பதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நாட்டினையும் நாட்டு மக்களையும் தாம் பாதுகாத்து வருகின்றதாகவும் அவர்களது கலை கலாசாரங்கள் பாதுகாக்கப்படுகின்றதாகவும் சர்வதேச நாடுகளுக்கு அறிக்கைக்கு மேலான அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசு எம்மையும் எம் இனத்தை அழித்தும், ஒழுக்கக்கட்டுப்பாட்டுடன் விளங்கிய தமிழ் மக்களின் கலாசாரத்தினைச் சிதைப்பதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்ற ஆதங்கத்தையும் தற்போது தமிழ் மக்கள் வெளியிட்டு வருகின்றனர். இதனை சர்வதேச சமூகம் காதில் வாங்கிக்கொள்ளுமா? புலம்பெயர்ந்து உலகெங்கும் பரந்து வாழும் எம் தமிழ் உறவுகளே நாம் சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!

நன்றி : ஈழமுரசு

எழுதியவர் : (29-Apr-17, 3:16 pm)
பார்வை : 126

சிறந்த கட்டுரைகள்

மேலே