பேருந்தில் ஒருநாள்

பள்ளிச் செல்லும் குழந்தைகள்
பருவம் எய்திய
பட்டாம் பூச்சிகள்
தலை நரைத்த கிழவிகள்
மடியில் அமரும் குழவிகள்
தாலிக்கொடி மலர்ந்தப் பூக்கள்......

வால் முளைக்காது
சேட்டைகள் செய்திடும் இளையோர்கள்
அரும்பு மீசையோடு
குறும்புகள் குடியிருக்கும் வாலிபர்கள்
முறுக்கிய மீசையோடு
மணமேடை ஏறிய கால்கள்
தள்ளாடும் தாத்தாவோடு
நானும் ஒரு மூலையில்......

எழுகின்ற சத்தமும்
புது இன்னிசையாய்
செவிகளில் பாய்ந்து
சன்னலில் நுழையும் தென்றலோடு
மனதினை மயக்கிட
அதிகமாகியது
கூட்ட நெரிசல்......

கருப்புப் பூனையாய்
காமம் தன்நிலை மீறி
காஞ்ச மனத்தோடு
உரசி பார்க்கும் கொடியோரால்
செம்பூ விழுந்து
தாங்காது துடிக்கும் இதயத்தில்
செந்தழல் விழுவதாய்
அப்பெண்மை அந்நொடி துடித்தாள்......

என்னுள் இரத்தம்
பொங்கி எழுந்து
உள்ளேயே உறங்கியும் விட்டது...
சகித்து நிற்கும் பாவையில்
கொதிக்கும் அணுக்கரு உலையாய்
கண்களில் கனல் தெறிக்க
அஞ்சு விரலால் அச்சுப் பதித்தாள்
அவன் கன்னத்தில்
காளியாய் அழகு பூவை
அந்தக் கணம்
குளிர்ந்தது என் மனம்......

உழைத்து உரமேறிய
வலிய கரத்தால்
மறு கன்னம் விழுந்தது
தாத்தாவின் அறை
கண்கள் அனைத்துமிங்கு நோக்கிட
அந்த அழுக்கு மனம்
பார்வையை விட்டு
தொலைவில் மறைந்தது......

இளமை துடிப்பும்
இப்புவி போற்றும் அறிவும்
இருந்தென்ன பயன்
முதுமைக்கு வந்த வேகம்
இளைஞன் என்னிடம்
முடமாகி கிடக்கிறதே......

அவலங்கள் கண்டு
அனலாய் மனம் சினந்தாலும்
அதைத் தட்டிக் கேட்கும்
துணிவோ?...
இன்னும் முளைவிடாமல்
மலடாய்ப் புதைந்தே இருக்குதே
எனும் நினைவோடு
இறங்கியது எந்தன் கால்கள்
பேருந்திலிருந்து......

எழுதியவர் : இதயம் விஜய் (1-May-17, 9:01 am)
Tanglish : perunthil orunaal
பார்வை : 111

மேலே