என்றென்றும் வாழ்க இனிது
உழுதபின்னே வானிலே உச்சிவெயில் உறைக்க
பழங்கஞ்சி வெங்காயம் உண்டு – தொழுதே
நன்றாகவே விவசாய மினிதே செய்பவரே
என்றென்றும் வாழ்க இனிது!
விதைநெல் பதப்படுத்தி வீட்டிலே சேர்த்து
புதையலாய் காத்தே என்றும் – அதையே
மண்ணிலே விதைத்தே மகிழ்வோடு வாழ்பவர்
என்றென்றும் வாழ்க இனிது!
மண்மிதித்தால் ஒட்டுமென மண்ணை மாற்றி
விண்ணின் மழைக்காய் ஏங்கும் – கண்விரித்தே
மண்ணையே ஏக்கத்தோடு மருகிநிற்கும் உழவா
என்றென்றும் வாழ்க இனிது!
ஆடிக்கார் இருக்குமென ஆவேச கூச்சலிடை
நாடிவந்த உழவர்கூட்டம் நலனே – நாடி
என்றுமே குரல்கொடுக்கும் இனிய உழவா!
என்றென்றும் வாழ்க இனிது!
கவிஞர் கே. அசோகன்.