நான் யார்

உன் கூந்தல் அழகுக்கு
நான் மல்லிகையா , நெகிழிப்பூவா?

உன் நெற்றிப் பொட்டலில்
நான் ஓட்டுப் பொட்டா குங்குமமா?

நீ பார்க்கும் பார்வையில்
நான் விழியா காட்சியா?

நீ சுவாசிக்கும் காற்றில்
நான் உள்ளிழுப்பா வெளியேற்றமா?

நீ பேசும் பேச்சுக்கு
நான் குரலா வார்த்தையா ?

உன் உதட்டின் ஓரத்தில்
நான் சாயமா புன்னகையா?

உன் சங்குக் கழுத்தில்
நான் பாசிமாலையா மாங்கல்யமா?
உன் நெஞ்சக் கூட்டுக்குள்
நான் நினைவா மறதியா?

உன் பருவத்தின் அழகுக்கு
நான் நிரந்தரமா தற்காலிகமா?

நீ காணும் கனவில்
நான் நாயகனா வில்லனா?

நீ வாழும் வாழ்வுக்கு
நான் துணையா தொந்தரவா?

நீ செல்லும் பயணங்களில்
நான் வழியா வழித்துணையா?

உன் பதிவுத் திருமணத்துக்கு
நான் கையொப்பமா சாட்சிக் கையொப்பமா?

என் மௌன தேவதையே
நான் யார்தான் சொல்லிவிடு அன்றேல்
உன் மயக்கும் விழிகளினால்
என் காதலில் கொள்ளியிடு இன்றே!
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-May-17, 1:58 am)
Tanglish : naan yaar
பார்வை : 292

சிறந்த கவிதைகள்

மேலே