என் கிராமம்

வாழ்த்துகின்ற
தமிழர்களுக்கு மத்தியில்...
வாழவைத்த என்
தாய் கிராமத்திற்காக ஒரு
வாழ்த்து மடல்...

மலையும், மலை சார்ந்த பகுதியும்,
மன்னரும், மக்கள் சார்ந்த பகுதியும் தான் ஊற்றுமலை... ஊத்துமலை...
மலைபோல் வீரம்
ஊற்றெடுத்த ஊராம்...

வேட்டைக்கு ஏற்ற மலைப்பகுதிகள்
வெள்ளாமைக்கு ஏற்ற நிலங்களாக
மாற்றப்பட்ட போது கசிவுகிரி
மலையடிவார புதர்க்காடுகள்

அழிந்ததால் உருவான
அழகுக் குழந்தையே...
என் கிராமத்தாய்...
இரு நூற்றாண்டுகளைத்(1793)

தொலைத்து விட்ட பொழுதிலும்
மூன்றாம் நூற்றாண்டிலாவது
முன்னேறத் துடிக்கும்
என் தாய் கிராமம்...

இந்திய வரைபடத்தில்
அறிய முடியாத ஓர் அரைப்புள்ளி...
இயன்றவரை பேர் சொல்லும்
அரண்மனை மாறிய ஆர்.சி.பள்ளி...

ஊருக்குள் வருபவருக்கும்
ஊரின் பசுமையை
உரக்கச் சொல்கின்ற
பச்சை வண்ணத்தில்

பெயர் பொறிக்கப்பட்ட
கைகாட்டி மரம்...
இரும்புக் கைகாட்டி மரத்தில்
இருக்கும் துருப்பிடித்த பகுதி

ஊரின் வயதை
உளமாற நினைவுபடுத்துகிறது...
ஆடுகள் எல்லாம்
மேய்ந்த புல்தரைகள் - இன்று
வீடுகள் இல்லா
காய்ந்த புதர் தரைகளாயின...

சங்கத்தமிழ் மூன்றையும் தன்
அங்கத்தோடு தவழவிட்ட
தங்கப்பாண்டியன் எனும்
தமிழ்க்கடலைப் பெற்றெடுத்ததற்காக
சிங்கமென கர்வம் கொள்கிறது

என்னையும் பெற்றெடுத்த
என் கிராமத்தாயின் கருப்பை...
கல்லணை கட்டிய
பெருவளத்தானை
மறவாத உலக மாந்தர் மத்தியில்
கல் எண்ணெய்(பெட்ரோல்) காட்டிய நிறைகுளத்தானை
மறக்க முடியாத ஊர்மக்கள்...
பாத்திரம் எடுத்துக்கொண்டு
பக்கத்து வீட்டு நண்பர்களோடு சேர்ந்து
பாதம் நோக நடை நடந்து
பண்ணை நோக்கி
பக்குவமாகச் சென்று
பசுக் கூட்டங்களைப்
பார்த்து ரசித்து விட்டு
பல நிமிடம் காத்திருந்து
பைசா கணக்கில் மட்டுமே
பணம் கொடுத்து
பால் கறக்கின்ற
பல்லுப்போன தாத்தாவிடமிருந்து
பாசத்தோடு வாங்கி வந்த
கறந்த பாலில்
காபி கலந்து சூடாக அருந்தியதால்
காயமானது நாக்கு மட்டும் தான்
ஆனால் இன்று
மாயமானது
பால் பண்ணையும்
பழைய நினைவுகளும் தானே...
சிகரம் தொட்ட பல
அண்டை ஊர்களுக்கு மத்தியில்
அவற்றுக்கெல்லாம்
அகரமாய் இருந்தது
அடியேனது தாய் கிராமம் என்பது
அறியப்படாதது அதிசயமே...
தெருவுக்கு ஒரு வீட்டில் மட்டும்
தொலைபேசி என்றிருந்த காலம் போய்
வீட்டிற்கு நாலைந்து
கைபேசி என்றானது
முன்னேற்றம் தான்...
வளர்ச்சியின் அடையாளம் தான்...

ஆனாலும்
நட்பு பாராட்டும்
நல விசாரிப்புகள் இங்கே
குறையத் தொடங்கியது தான்
கொஞ்சம் வருத்தமளிக்கிறது...

மக்கள் அன்று
மலைகளை வைத்து
நெல் போரிட்டு வளர்ந்தது
மகிழ்ச்சிக்கு காரணமானது...

ஆனால் இன்று
சிலைகளை வைத்து
சொல் போரிட்டு
தளர்வது தான்
மார்பு துளைக்கும் இரணமானது...

அழகில்லாத குடிசை வீடுகளில் கூட
அகலமான அளவு
தொலைக்காட்சிப் பெட்டி
வந்தது வளர்ச்சிதான் - அதனால்
சீசனின்றி வீழும்

நெல்மணிக்காக வருந்தாமல்
சீரியலில் அழும்
பெண்மணிக்காக வருந்தும்
தாய்மார்கள் பெருகியதுதான் மிச்சம்...

வருமானத்திற்காக வெளியூர்
தேடிச் செல்லும் ஆண்களுக்கு மத்தியில்
தன்மானம் காக்க
உள்ளூரில் பீடி சுற்றும்
பெண்களைப் பார்த்தால்
பெருமையாய் இருக்கிறது -ஆனால்
புகையிலை போல் என்
ஊர் பெண்டிர்
உழைப்பெல்லாம்
புகைந்து போவதை நினைத்தால் மட்டும் கொஞ்சம்
நெடியடிக்கிறது

நெஞ்சிக் கூட்டில்...
திண்ணைகள் அலங்கரித்த வீடுகளும்
பண்ணையை ஆட்கொண்ட மாடுகளும்
எண்ணத்தில் இருந்து விலகியது
கண்ணத்தைக் கிள்ளி
கண்டு கொண்டேன்
கனவல்ல நிஜம் தானென்று...
அன்று
வேட்டையாடிய
வனப்பகுதியும் இதுதான்...
கோட்டை கட்டி ஆட்சி செய்த
மலைப்பகுதியும் இதுதான்
மூட்டை மூட்டையாய்
நெல் விளைந்த
வயல் பகுதியும் இதுதான்...
ஆனால் இன்று
கூட்டம் கூட்டமாய்
மக்கள் இன்று
பிழைப்புக்காக வெளியூர்
நாடுகிறார்கள்...
காரணம் விதியா இல்லை சதியா
விடை தெரியவில்லை...
சிலரது வீடுகளில் மட்டும்
குளிர் சாதனப் பெட்டி
வளர்ச்சி தான் - அங்கு
ஈரப்பசையோடு இருப்பது
காய்கனிகள் மட்டும் தான் - ஆனால் உயிர்ப்பசையின்றி
காடுகளில் சாய்கிறது
பலரது உழைப்பில் வந்த
நெல்மணிகள்...
அன்று கூழு குடித்து
காண முடிந்த
உடற்கட்டை
இன்று ஏழு மருந்துக்கடை
இருந்து பேண முடிவது
என்றும் நம் முன்னேற்றத்திற்கு
இழுக்கு தருகிறது...
அன்று கைகாட்டி மரங்கள் பார்த்து
அறியப்பட்ட ஊரின்
வெளிப்பகுதி இன்று
காற்றாலைக் கரங்களால்
ஆட்கொள்ளப்பட்டது
சற்று வருத்தமளிக்கிறது...
ஊர் சுற்றிய இளைஞனுக்கு
ஊதியம் கொடுக்கும் வேலை
கொடுத்ததால் அர்த்தப்பட்டது
காற்றாலை மட்டுமல்ல...
கலங்கிய மக்கள் மனதும் கூடத்தான்...
ஆதி காலத்திலேயே
நீதி காக்கும் பொருட்டு
வீதிக்கொரு கோவில்
சாதிகளின்றி அமைந்ததால்
பாதியானது இங்கு
பங்காளிச் சண்டைகள் மட்டுமல்ல
பீதியானது
பக்கத்து ஊர்களுமே தான்...
எழுதுகோல் பிடித்தறியாத
கைகளில் கூட இன்று
எலக்ட்ரானிக் வீடியோகேம்கள்
இமாலய வெற்றி தான்...
ஆனால்
நலம் பேணுகிற
நாட்டுப்புற விளையாட்டுக்கள் எல்லாம்
நகர்வலம் சென்று விட்டதோ...
என நம்மை நாமே கேட்க
வேண்டியதாயிற்று...
இவ்வூரைப் பற்றி இன்னும்
எவ்வளவோ சொல்லலாம்...
என்னதான் சொன்னாலும்
எஞ்சி நிற்கும் சொல் எல்லாம் !!!
(இகழ்ச்சியாக வசை பாடியோரும்
மகிழ்ச்சியாக அசை போடும்படி
புத்தகக் கனியொன்றைக் கொடுக்க
ஊத்துமலையை மரமாக்கினேன்
- அதற்கேற்றாற்போல் என்
எழுத்துகளை உரமாக்கினேன்)
ஆக்கம்
ஊ.வ.கணேசன்

எழுதியவர் : கவிஞர் ஊ.வ.கணேசன் (20-May-17, 1:38 pm)
சேர்த்தது : selvi sivaraman
Tanglish : en giramam
பார்வை : 4165

மேலே