இப்படி ஒரு பெண்ணை வர்ணிக்க முடியுமா
பெண்ணைப் பார்த்துக் கவிஞரான ஆண்கள் பலபேர். அன்றிலிருந்து இன்றுவரை ஒவ்வொருவருமே தங்களின் அறிவிற்கும் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்பப் பெண்களை வர்ணித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் மட்டும் பெண்கள் ஆண்களோடு போட்டி போட முடியாது என்று நினைக்கிறேன். ஒருவேளை அதற்கான அனுமதி ஆணாதிக்கச் சமூகத்தில் மறுக்கப்பட்டிருக்கலாம்.
வாசிப்பவரின் அறிவிற்கும் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற தளங்களில் அக்கவிதைகள் ரசிக்கப்படுகின்றன. நிலைபேறடைகின்றன அல்லது காணாமல் போய்விடுகின்றன.
பெண்களைப் பற்றிய சில கற்பனைகள் அவர்களைப் போன்றே அழகானவை.
அவ்வழகிற்கும் இலக்கிய அழகிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இலக்கிய அழகு, நரை திரை வராமல் எக்காலத்திற்கும் இளமையாய் இருக்கும் அழகு. தமிழ் அழகு.
ஒரு ஓவியத்திற்கு அதன் பின்புலம் முக்கியம். வரைகின்ற ஓவியத்திற்கேற்ப அது நிறவேற்றுமையுடன் இருக்க வேண்டும். உதாரணமாக வெள்ளைப் பின் புலம் என்றால் கருப்பு.
இரவு வானத்தில் நிலவு போல.
பகலில் நிலவு இருந்தாலும் நாம் அதைக் காண முடிவதில்லை.
எனவே அலையலையாய்ப் படிகின்ற இருளைப் பின்புலமாகக் கொண்டு எழுகிறது இப்பிறை .
ஆனாலும் இப்பிறை அவளின் அழகிய நெற்றிக்கு ஈடாகாது.
மான்விழியின் மருட்சி அவ்விழிகளில் இருந்தாலும், மான் விழி அவள் விழிமுன் நிற்க முடியாது.
இது மனித உரு அல்ல.
மனித உருவில் நிச்சயமாய்ச் சில குறைகள் இருந்தே தீரும்.
சிற்பி ஒரு சிலையை வடிக்கிறான் என்றால் எந்தக் குறையும் இல்லாதபடி, செய்கின்ற அந்த வடிவத்தில், சிறுத்த இடையை, மூங்கில் போன்ற தோள்களை, பார்ப்போரின் மனம் கொள்ளும் புன்னகையை நிலையாக வடித்துப் போகமுடியும்.
இங்கோ எந்தக் குறையும் இல்லாத சிற்பம் போன்று என் முன் நிற்கும் உயிருள்ள இப்பெண்ணின் வடிவத்தைப் படைத்தவன் யார் என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும்…! இவளைப் படைத்தவன் பிரம்மனாய் இருந்தால், நிச்சயம் இவளை உருவாக்குவதற்குமுன் ஒரு மாதிரிக்காகத திருமகளை உருவாக்கிய பின்தான் அவளிடம் இருக்கும் குறைகளைச் சரிசெய்துவிட்டு எவ்வித மாசும் இன்றி இவளை உருவாக்கி இருப்பான்.”
கம்பனின் மகன் அம்பிகாபதி பாடியதாக வருகிறது இப்பாடல்,
“மைவடிவக் குழலியர்தம் வதனத்தை
நிகர்‘ஒவ்வா மதியே! மானே!!
செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்
திருநகையைத் தெய்வ மாக
இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ
நானறியேன்! உண்மை யாகக்
கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்
படைத்தனன் நல்கமலத் தோனே! ”
இன்னொரு புலவன் பார்க்கிறான்.
அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடுகிறது.
நாம் நினைப்பதுபோல் அது சாதாரண கொடியன்று. பொற்கொடி.
என்றும் வாடாத அக்கொடியின் தலையில் பெரும் சுமை.
அது சுமந்திருப்பது மழைமேகத்தை.
அக்கொடி அணிந்திருப்பது பிறை.
அக்கொடியின் முகம் ஒரு தாமரை.
அப்பிறையின் கீழே போரிடும் வில்லும் துள்ளும் மீன்களும்.
அவள் கேட்டால் அவளுக்காக எதையும் தரத் தயாராய் இருக்கும் கற்பகத் தருவின் பக்கத்தில் அக்கொடி நிற்கிறதாம்.
இதைத் தஞ்சைவாணன் கோவையின் பாடல் இப்படிச் சொல்கிறது.
“புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன்
கயலே மணந்த கமலம் மலர்ந்துஒரு கற்பகத்தின்
அயலே பசும்பொற் கொடிநின்றதால் வெள்ளைஅன்னம் செந்நெல்
வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே”
( புயல் – மழைமேகம். கூந்தலைக் குறித்தது.
பிறை – நிலவு. நெற்றியைக் குறித்தது.
பொருவில். – போரிடும் வில். புருவத்தைக் குறித்தது.
கயல் – மீன். கண்ணைக் குறித்தது.
கமலம் – தாமரை. முகத்தைக் குறித்தது.
பசும்பொற்கொடி – தூய பொன்னாலான கொடி. தூய மாறா அழகுடைய அவளைக் குறித்தது.
கற்பகம் – கேட்பார்க்குக் கேட்பதை அளிக்கும் மரம். அவளுக்காகத் தன்னால் ஆவன எதனையும் செய்யத் தயாராயிருக்கும் அவனைக் குறித்தது. )
எழுதியவன் இல்லாவிட்டால் என்ன..? இளமைமாறாமல் இருக்கின்ற அந்தப் பொற்கொடியை காலகாலமாய் மீட்டெடுத்து எத்தனை எத்தனை கண்கள் கண்டு ரசிக்கின்றன. அவளுக்கு இறவாப் பெருவரம் அளித்துப் போய்விட்டான் அந்தப் புலவன்.
சரி நம் காலத்திற்கு வருவோம்.
குறிஞ்சி மலரில் ந.பார்த்தசாரதி ஒவ்வொரு இயலின் தொடக்கத்திலும் பாடலொன்றை எடுத்துக் காட்டி எழுதிப்போவார். அவற்றுள் அவரது சொந்தப் பாடல்களும் அடக்கம்.
ஆறாவது இயலின் தொடக்கத்தில் அவர் எழுதியிருக்கும் பாடல்.
“நிலவைப் பிடித்துச்
சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம் ,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி .”
அவள் முகம் நிலவு என்கிறார்கள் காலகாலமாய்….! ஆனால் அதில் சிறுசிறு கறைகள் இருக்கின்றனவே!
எனவே அவள் முகம் நிலவு முகம் அன்று.
அம்முகம் நிலவைப் பிடித்து அதன் கறைகளைத் துடைத்து சிறிய புன்னகையை அதில் பதித்த முகம்.
அவள் நினைவுகளை என்னில் பதித்து, என் மனதில் அவள் அலைகளை நிறைத்து, அதில் மேலும் அதிர்வுகளை உண்டாக்கும் வலிமை பெற்ற நளினத்தைத் தெளிக்கின்ற விழிகள் அவளிடம் உள்ளவை.
குறிஞ்சிமலரின் இவ்வளவுதான் காட்டுகிறார் நா.பா. ஆனால் இதன் கண்ணிகள் இன்னும் இருக்கின்றன.
“நிலவைப் பிடித்துச்
சிறுகறைகள் துடைத்துக் - குறு
முறுவல் பதித்த முகம் ,
நினைவைப் பதித்து - மன
அலைகள் நிறைத்துச் - சிறு
நளினம் தெளித்த விழி .
தரளம் மிடைந்து - ஒளி
தவழக் குடைந்து - இரு
பவழம் பதித்த இதழ்
முகிலைப் பிடித்துச் சிறு
நெளியைக் கடைந்து - இரு
செவியில் திரிந்த குழல்
அமுதம் கடைந்து - சுவை
அளவிற் கலந்து - மதன்
நுகரப் படைத்த எழில்”
முத்துகளைக் கோத்து ( தரளம் மிடைந்து) அவற்றின் ஒளி தெரியாதவாறு குடைந்து உள்வைத்து வெளியே சிவந்த இரண்டு பவழத்தைப் பதித்த இதழ்கள்.
மேகத்தைப் பிடித்து அதைக் கடைந்து காதுகளின் இரு மருங்கிலும் அது உலவுமாறு விடப்பட்ட கூந்தல்.
மொத்தத்தில் பாற்கடல் கடைந்து கிடைத்த அமுதினையே மீண்டும் கடைந்து வந்தத் தெளிவுடன், இன்னும் இன்சுவையைக் கலந்து, மன்மதன் நுகரப் படைத்த அழகு.
கவியின் தரிசனத்தில் கண்ணடைத்து உள் கடக்கக் கடக்க, அந்த அமுதைக் கடைந்து அதன் சுவையோடு இன்னும் சுவையைக் கலந்து நுகரப் படைத்த அழகின் நதி மனதையும் அடித்துக் கொண்டு போகிறது.
உங்களுக்கு…..?
இந்நேரம் திருக்குறளும் திரையிசைப் பாடல்களும் நினைவு வந்திருக்க வேண்டுமே..!
நினைவிற்கு வந்தால் அதனையும் உங்கள் கருத்துகளையும் அறியத் தாருங்கள்.
இன்னும் தொடரலாம்.
: ஊமைக்கனவுகள்

