நாக்குக்கு மோட்சம்

வியாழக்கிழமல மார்க்கண்டேய விலாஸ்ல கடப்பா போடுவான்.. பாரு.. அப்படியே நம்ம சொத்தை எழுதி வச்சிருலாம்... இந்த ரசம் வச்ச கைக்கு தங்கத்ல காப்பு பண்ணி போடலாம்.." என்றெல்லாம் நாக்கை சப்புக்கொட்டி வாயில் எச்சிலொழுக பாராட்டுவார்கள் போஜனப் பிரியர்கள். ஆளுயர தலைவாழை இலை போட்டு மேற்கிலிருந்து கிழக்கு திசை வரை பரிமாறிய ஐட்டங்களில் மூலையில் இருக்கும் பதார்த்தத்தை இலை மேல் படுத்து உருண்டு எடுத்து சாப்பிடும் படி சிரார்த்தத்திற்கு இராமாயண சாஸ்த்திரிகள் வீட்டில் விஷ்ணு இலை போடுவார்கள். பருப்பு, ரசம், மோர் என்று நித்யபடி மூன்று வேளைக்கும் மூக்கைபிடிக்க இதையே வழக்கமாக சாப்பிட்டு பழக்கப்பட்டுவிட்டதால் இப்போது வேட்டையை இடது புறத்தில் இருந்து ஆரம்பிப்பதா அல்லது வலது ஓரத்தில் இருந்து ஆரம்பிப்பதா என்று தெரியாமல் திருவிழாவில் காணாமல் போனது மாதிரி விழித்திருக்கிறேன். எடுத்தவுடன் அதிரசத்தை எடுத்து சாப்பிட்டுவிட்டு "உங்காத்து பையனுக்கு சாப்பிடக் கூட தெரியலையே! இப்டி அசடா இருக்கானே!"ன்னு சொல்லி கைகொட்டி சிரித்திருக்கிறார்கள். சாப்டக் கூட லாயக்கில்லை. கரெக்ட். பதிவு சாப்பாட்டை பற்றித்தான்.

பால்யத்தில் மிளகு சீரகம் போட்டு வீட்டில் ரசம் வைத்தால் நான் போட்டிருந்த ட்ராயரோடு சட்டை கூட இல்லாமல் எஸ்கேப் ஆகிவிடுவேன். ஆனால் அந்த ரசம் ஒரு ஜீவாம்ருதம். அந்த சர்வ ரோக நிவாரிணியை பருகினால் ஜலதோஷம் போன்ற உடல் தோஷங்கள் பனியென விலகி பறந்து ஓடிவிடும். வேகவைக்காத பருப்பை லேசாக வறுத்து கொட் ரசம் என்று புளி தூக்கலாக போட்டு ஒரு ரசம். இது அவசர ரசம். காலையில் பருப்பு வேகவைக்க மறந்து விட்டால் வரும் அதிரடி ரசம். அடுத்து எலும்பிச்சம்பழ ரசம். பெயரே தன்மையை தாங்கி நிற்கிறது. விளக்குவதற்கு ஒன்றும் இல்லை. எலும்பிச்சம் பழச் சாறு கரைத்த ரசம். பூண்டு ரசம் கொஞ்சம் காரமாக கண்களில் ஜலம் வர பண்ணி சாப்பிட்டால் ரொம்ப நல்லது. பூண்டின் மருத்துவ குணங்கள் அலாதியானது. சில பேருக்கு கேஸ் பிரியும். அபானன். பருப்பு ரசம், நாலைந்து பழுத்த நாட்டு/பெங்களூர் தக்காளியை பிச்சுப்போட்டு வைப்பது. நல்ல ரத்த சிவப்பு கலரில் இருந்தால் ரொம்ப விசேஷம். நவரசம் என்றால்

பருப்பு ரசம்
ஜீரா ரசம்
மிளகு ரசம்
தக்காளி ரசம்
கொட் ரசம்
பைனாபிள் ரசம்
நல்ல ரசம்
கெட்ட ரசம்
ஊசிப்போன ரசம்
என்று நாக்குவன்மை படைத்த சிலர் பட்டியலிட்டு சொல்வதும் வழக்கில் உண்டு.

ஒரு சாப்பாட்டறிவு விஷயம். தென்னகத்தில் இலையில் பரிமாறினால் எந்தெந்த பதார்த்தங்களை எங்கெங்கு பரிமாற வேண்டும் என்பதைப் பற்றிய படமும் விளக்கமும் கீழே. எல்லார் வழக்கத்திலும் இப்படித்தான் இருக்கும் என்று இல்லை. ஒரு ஐடியாவிற்கு பார்த்துக் கொள்ளலாம்.
1. உப்பு
2. ஊறுகாய்
3. சட்டினி
4. கோசுமரி (Green Gram Salad)
5. கோசுமரி (Bengal Gram Salad)
6. தேங்காய் சட்டினி
7. Beans Pallya (Fogath)
8. Gujje Pallya (Jack Fruit Fogath)
9. சித்ரான்னங்கள் (எலும்பிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம்)
10. அப்பளாம்
11. சிப்ஸ்
12. இட்லி
13. சாதம்
14. பருப்பு
15. ரைத்தா
16. ரசம்
17. Uddinahittu (Black Gram Paste)
18. கத்திரிக்கா பக்கோடா
19. Menaskai (Sweet And Sour Gravy)
20. Goli Baje (Maida Fry)
21. அவியல்
22. வெண்டைக்கா பக்கொடோ
23. கத்திரிக்கா சாம்பார்
24. ஸ்வீட்
25. Gojjambade (Masalwada Curry)
26. Kayi Holige (Sweet Coconut Chapati)
27. Vangi Bath (Vegetable Upma)
28. Bharatha (Sour Ginger Gravy)
29. பாயசம்
30. தயிர்
31. மோர்
பருப்பு உசிலி, வெண்டைக்காய் மோர்குழம்பு, அவியல், பாகற்காய் பிட்ளை, வாழைக்காய் பொடி மாஸ், கருணாக் கிழங்கு மசியல் போன்றவை எங்கள் பக்க சிறப்பு உணவு வகையாறாக்கள். எரிசேரி, புளி இஞ்சி, கப்பை புழுக்கு போன்ற சில திருநெல்வேலி பக்க ஐட்டங்கள். ஐங்கிரிமண்டி என்று எங்கள் ஊரில் மராத்தியும் பேசும் ராவ் குடும்பங்களில் செய்வார்கள். ஐந்து விதமான சுவையும் நிறைந்து இருக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு கௌளி வீதம் வெற்றிலையும் மணக்க மணக்க பன்னீர் புகையிலை கூட வைத்து வாயில் கொதப்பிக்கொண்டே இருப்போரும் பான் பாராக் போடும் பரம குட்கா அடிமைகளுக்கும் உப்பு உரைப்பு இரண்டுமே ஒரு மடங்கு தூக்கலாக வேண்டும். "சே..ரொம்ப சப்புன்னு இருக்கு...." என்று எல்லாரும் விரும்பும் சமையலை குறை சொன்னால் நிச்சயம் அது மேற்கண்ட புகையிலை பார்ட்டியாக இருக்கும் அல்லது ஆந்த்ரா பார்ட்டியா இருக்கும். ஆந்திராகாரர்கள் ஆகாரம் காரமாக சாப்பிடுவார்கள். இது போன்றவர்கள் நாக்குக்கு தேய்மானம் அதிகம். கேட்டரிங் சமையல்காரர்கள் பலர் வெற்றிலை, குட்கா மற்றும் ஓட்கா போன்றவற்றில் நாட்டம் உடையவர்கள். ஆனாலும் வாயில் ஊற்றிப் பார்க்காமலேயே மோந்து பார்த்து வலது கையால் ஓம் முத்திரை காட்டி "நல்லாருக்கு..." என்று சொல்லும் திறன் படைத்தவர்கள். நாக்கின் பலவீனத்திற்கு மூக்கு ஒத்துழைக்கிறது. சில பேர் அடுப்பில் கொதிக்கும் போதே "உப்பு பத்தலையே.." என்று சொல்வார்களாம். இவர்கள் போலீசில் வேலைக்கு சேரலாம். பனியன் போட்டுக்கொண்டு கழுத்தில் செயின் கட்டி இவர் பின்னால் ஓடிவரவேண்டிய அவசியம் இல்லை. அட்ராட்ரா நாக்க மூக்க. நாக்க மூக்க.

கையை ஸ்பின் பௌலர் போல ஒரு சுழற்று சுழற்றி இலை கிழியும் அளவிற்கு வழித்து வழித்து "சர்..புர்.." என்று உறிஞ்சி புறங்கையை நக்கி சாப்பிடும் சிலரைக் கண்டால் நாலடி தள்ளி நகர்ந்து உட்கார்ந்து கொள்ளலாம். இல்லையேல் நம்மேல் ரசச் சாரலடிக்கும். இன்னும் சிலர் கொஞ்சம் காரமாக இருந்தால் மூக்கில் ஒழுகும் சளியை கூட சர்வ சுதந்திரமாக இடது கையால் சிந்தி வேஷ்டியில் துடைத்துக் கொள்வர். தற்போது கல்யாண பந்திகளில் இலைக்கு இரண்டு புறமும் ரசம், பாயசம், குலோப்ஜாமொன், தண்ணீர், ஐஸ்க்ரீம் என்று ஏகப்பட்ட சைட் ஐட்டங்கள் அடுக்குகிறார்கள். நான் பார்த்த ஒரு கல்யாணத்தில் "சாப்பாட்டு ஆர்வலர்" ஒருவர் போகிறபோக்கில் இரண்டு பக்கமும் இருந்த கிண்ணங்களில் இருந்த ரசம், பாதாம் கீர் என்று எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டார். கோபாக்கினியில் கொதித்துப் போன பக்கத்து இலை ஆள் முறைத்து பார்த்ததும் "ஹி..ஹி.. ஸாரி.. கவனிக்கலை.. யாருப்பா அங்க... அண்ணா கீர் கேக்கறார் பாரு" என்று சொல்லிவிட்டு மீண்டும் தன் பணியை செவ்வனே தொடர்ந்தார். சொன்ன ஆளுக்கு பெருத்த அவமானமாகப் போய்விட்டது.

ஊரில் புதுத் தெரு ஜனதா ஓட்டலில் ரவா தோசை வாரத்தில் இரண்டு நாள் தான் போடுவார்கள். துண்டு போட்டு சீட் பிடித்து கும்பல் அம்மும். அதுவும் மாலையில் மட்டும் தான். அப்பாவோடு எப்போதாவது அந்தக் கடைக்கு போனால் "சரியா படிக்கலைனா இங்கதான்... டேபிள் துடைக்க வேண்டியதுதான்..." என்று சொல்லி வாங்கிக் கொடுத்த பூரியை நிம்மதியாக வாயில் வைக்க விடமாட்டார். இப்போது அந்தக் கடை க்ளோஸ். ஆபிசுக்கு அரை நாள் லீவு போட்டுவிட்டு அந்தக் கடையில் ஆசையாக தோசை வாங்கி சாப்பிட்ட தோசையப்பர்களை நானறிவேன். இங்கு சென்னை வந்த பின்னர் நான் பார்த்த எல்லோரும் "சூடா இருக்கா?" என்று எல்லா இடத்திலும் கேட்டு வாங்கி சாப்பிட்டார்கள். முதலில் புரியாமல் இருந்த எனக்கு என் அத்திம்பேர் தான் அந்த சூட்சுமத்தைச் சொன்னார் "சூட்ல டேஸ்டா இருக்கா இல்லையான்னு தெரியாது... நாக்குக்கு சூடு போட்டு ஐட்டத்தை அப்டியே உள்ள தள்ளிடலாம்..". எவ்ளோ பெரிய உண்மை என்று ஒருமுறை ஆறி அவலாக போன ரவா தோசையும் சாம்பாரும் சாப்பிட்டபோது உரைத்தது.

காலகாலத்திற்கும் சாப்பாடு பாடலாக ஒலிக்கும் மாயாபஜார் படத்தில் வரும் "கல்யாண சமையல் சாதம்..". ஹா..ஹ்.ஹ.ஹ் ஹா..ஹா..


சாப்பாட்டில் முடி இருந்தால் உறவு விட்டுப் போகாது என்று சொல்வது ஏன் என்று யாருக்காவது தெரியுமா? முடிந்தால் பின்னூட்டத்தில் கருத்துரைக்கவும்.

பின்குறிப்பு: இந்தப் பதிவை எழுதியவருக்கு அவர் வீட்டில் சமையலறை எங்கே இருக்கிறது என்ற திசை கூட தெரியாது. வெந்நீர் இருக்கா என்று யாராவது கேட்டால் கூட பாத்ரூம் ஹீட்டர் போட்டு கொண்டு வந்து தருவார். கேஸ் அடுப்பை மூட்டக் கூட தெரியாது. ஆகையால் ஏதேனும் தவறு இருப்பின் பதிவுலக கிச்சன் கில்லாடிகள் இந்த பூச்சியுடன் சண்டைக்கு வராதீர்கள். மேலும் இப்பதிவில் இனிப்பு வகைகளையும் இன்னபிற கரக் மொருக்கு நொறுக்குகளையும் பதியவில்லை. இந்தப் பதிவு ஜீரணம் ஆனதும் பொறுமையாக பிரிதொருநாளில் பதிகிறேன்.


பின் பின் குறிப்பு: கர்னாடக சங்கீத கல்யாணப் பாடல்களில் "போஜனம் செய்ய வாருங்கோ" என்று ஒரு பாடல் உண்டு. யூடுயூபை நோண்டி நொங்கு எடுத்துவிட்டேன். கிடைக்கவில்லை. கேட்காத காதுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.

RVs

எழுதியவர் : (21-May-17, 11:41 am)
Tanglish : naakkukku mootcham
பார்வை : 76

மேலே