நன்றுன்னல் சான்றோர் நடை - இன்னிசை இருநூறு 198
இன்னிசை வெண்பா
நன்றொரு கோடி செயினுமவை நாடாமே
ஒன்று நவைநாடி யூறு புரிவகீழ்
கொன்றன்ன தீங்குபல செய்யினுங் கொள்ளாமே
நன்றுன்னல் சான்றோர் நடை. 198
– இன்னிசை இருநூறு, அரசஞ் சண்முகனார்.
பொருளுரை:
கீழான குணம் படைத்தவர்களுக்கு நன்மையான உதவிகள் கோடியே செய்திருந்தாலும் அவற்றை மனதில் கொள்ளாமல், நாம் அறியாமல் செய்த தீமை ஒன்றை எண்ணித் தொல்லை கொடுப்பார்கள்.
நற்குணமுடைய சான்றோர்க்கு தம்மைக் கொன்று விடும்படியான தீமைகள் பல நாம் செய்தாலும் அவற்றை மனதில் கொள்ளாமல் நாம் செய்த ஒரு நல்ல உதவியை எண்ணி நல்லதையே செய்வது அவர்களுடைய இயல்பும், ஒழுக்கமும் ஆகும்.
இதனையே வள்ளுவர் கீழேயுள்ள குறளில் முன்பே கூறியிருக்கிறார்.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109 செய்ந்நன்றி அறிதல்
பொருளுரை:
முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.