கீழ்சாதிக்காரன் !

அறிவென்ற சொல்லுக்கு
அறிமுகம் இல்லை – இவர்
அறிமுகம் கொண்டவர்
நெறி நின்றதில்லை !

மண்ணுக்கு பயனெதுவும்
செய்யாத பிள்ளை – இவர்
மாண்புறு வித்தைகள்
கற்றாருமில்லை !

களவுக்காய் கரைவேட்டி
கட்டுவதுண்டு – தன்
கனவுக்காய் கழுத்தினில்
கட்சியின் துண்டு !

ஊழலும் பொய்யுமே
உடுக்கின்ற ஆடை – இவர்
உதவிட மறுப்பதால்
உழவினில் கோடை !

வறியவர் எளியவர்
உழைத்தநல் வரிப்பணம் – அதை
வாரிச் சுருட்டியே
வாழ்ந்திடும் நரி குணம் !

யாப்புக்கும் நேர்மைக்கும்
இழுக்காக நிற்பவர் – இவர்
யாசகன் தட்டிலும்
சில்லறை எடுப்பவர் !

விபச்சார அபச்சார
வியாபாரம் புரிவார் – நல்
விழுமியங்கள் கொண்டோரின்
விழுதினையும் அரிவார் !

காடழித்து கடலழித்து
கருப்பு பணம் நெய்வார் – பாவம்
காதலிப்போர் கழுத்தறுத்து
அரசியலும் செய்வார் !

மண் காத்தல் மரம் காத்தல்
கடனென்று அறியார் – செம்
மரக் கொள்ளை மணல் கொள்ளை
மட்டுமிவர் அறிவார் !

பன்னிரு மாதங்கள்
ஐம்முறை கடக்கும் – மீண்டும்
பாசத்தை புதுப்பிக்கும்
நாடகம் நடக்கும் !

எழுதியவர் : கே.எஸ். கலை (21-May-17, 12:38 pm)
பார்வை : 97

மேலே