நிமிர்ந்து நில்---பாடல்---

சொந்த மெட்டில் :
பல்லவி :
கண்ணைத் திறந்திடு தமிழா - உன்
அறிவு கண்ணைத் திறந்திடு தமிழா...
பொங்கி எழுந்திடு கடலாய் - உன்
அழகு நெஞ்சை அமைத்திடு மலையாய்......
வாசல் எங்கும் நுழையுதே மடமைகள்...
தேசம் எங்கும் அலையுதே கொடுமைகள்...
வாங்கும் பொருளில் நடக்குதே கலப்படம்...
தூங்கும் இரவும் வெடிக்குதே கலவரம்......
உறங்கும் புலியே எழுந்து வா...
உறுமும் குணமே சினந்து வா...
உறங்கும் புலியே எழுந்து வா...
உறுமும் குணமே சினந்து வா...
கண்ணைத்......
சரணம் 1 :
சுரண்டும் எலிகள் தினந்தினம் பிறந்திட
இங்கு வறண்ட நிலமாய் ஏழைமனம் தவிக்குதே...
சாதிய வேர்கள் கிளையை விரித்திட
அதில் சமத்துவ பூக்கள் உயிரை இழக்குதே......
இந்தக் கருப்பு புகையில் சூரியன் மறைந்தாலும்
உந்தன் நெருப்பு விழியால் உலகம் விடியுமே......
தடைகளை உடைத்திட புது படையென திரண்டிடு...
வன்மைகள் அழிந்திட நீ வாளையும் ஏந்திடு...
கண்ணைத்......
சரணம் 2 :
உருகும் மெழுகில் கருகிடும் திரியாய்
விச மிருகம் பலரால் பேதையுடல் சிதையுதே...
காதல் பேச்சில் மடந்தைகள் மயங்கிட
பல இளமை மூச்சும் விலையில் அடங்குதே......
இந்தச் சிகப்பு சிறையைக் காவலர் மறந்தாலும்
உந்தன் இரும்பு கரத்தால் கதவும் திறக்குமே......
விடுதலை கிடைத்திட புது விதிகளை வகுத்திடு...
நன்மைகள் நிலைத்திட நீ இராமனாய்த் தோன்றிடு...
கண்ணைத்......