இயற்கையோடு இணைந்து வாழுங்கள்
பணத்திற்காக மலத்தையும் உண்பேனென்கிறாயே மனமெல்லாம் மலமே நிறைந்த உலகமே.
அதுவே உனது நோய் என்று நானுரைப்பதால் நான் ஒரு மன நோயாளியாக உன் முன்பே காட்சியளிக்கிறேன்.
உயர்ந்து நிற்கும் பர்வதங்கள்,
கடல் சூழ்நிலம்,
ஒளி தருகதிரவன்,
குளிர் தருநிலவு,
உயிர் தருகாற்று,
இயக்கும் இருதயம்,
தாங்கும் நிலம்,
பயன் தருமரங்கள்,
பறக்கும் பறவைகள்,
மழை தருமேகங்கள்,
தாகம் தீர்குடிநீர்,
மாறும் பருவநிலைகள்,
உணவு தருசெடிகளென்று உயிர்வாழ சகலமும் தந்து பயன்கருதாதுதவும் இயற்கையே சிறந்ததென்று அறியா மூடராய், நாளும் பணமென பித்துப்பிடித்து, பித்தால் விளைந்த அயர்வை போக்க, கண்டபடி கலவியில் ஈடுபட்டு, கண்ட உணவை உண்டு, கண்டதைக் குடித்து,
புத்தி தெளிவையிழத்து,
மாயையில் சிக்கி மடியும் மாந்தர்களே,
இந்த பைத்தியத்தின் நன்மொழி கேளுங்களே..
ஆடம்பரமென்றும் நிலையானதல்ல..
ஒழுக்கமே உண்மையான உயர்வைத் தரும்..
ஒழுக்கமிழந்து, பொயுரைத்து, அடுத்தவரை ஏமாற்றி பெறப்படும் ஏதும் நிலைப்பதில்லை..
சந்தோஷமின்மையே மிகுந்து உள்ளம் வறண்டு, தன்னம்பிக்கை அழிந்து, எந்நேரமும் பயந்து பயந்து கோழையாய் சாகுவதே நிதர்சனமென உணர்ந்து நல்வழியைப் பற்றுங்களே..
இயற்கையோடு இணைந்து வாழுங்களே.....