அவள் கொடுத்த முத்தம்

வெறுமை..நீண்ட காலமாய் மழையையே அறிந்திராத ஒரு பாலைவனம் போல் மனசெல்லாம் வெறுமை.நீண்ட நெடிய போராட்டங்களில் வெற்றி பெற்ற பிறகு ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் கண்ணுக்கு தெரியாத,உணரமுடியாத ஒன்று என் மனதை ஆக்கிரமித்தது..!

துக்கம் முடிந்த வேளையில் கூட தூக்கம் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை.விருக்கென எழுந்தேன்.பழையவற்றை அசைபோட்டேன்.

பெரும் வெற்றிகளை தருவதற்கு முன்னால் வாழ்கை சில பயிற்சி வகுப்புகள் எடுக்குமே அந்த சமயம் அது.ஒரு செயல் என்னால் முற்றுபெறவேண்டிய சூழல்.அந்த வேளை அந்த வேலை எனக்கு என்னிலும் மிக உயர்ந்ததாகத்தான் தெரிந்தது.பிரமித்து போனேன்!

என்னை பார்த்து உலகம் சிரித்தது.சாக்கடை எப்படி சாமி ஆகும் என சொல் விளையாட்டு ஆடியது.என்னை கைபந்துகள் ஆக்கி கீழே போட்டு உருட்டியது.

வாழத்தெரியாதவன் என வசை பாடியது,உன்னால் முடியுமோ என அய்யப்பட்டது!

என் "சா" தனை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காய் புது சாதனை படைக்க வேண்டும் என எண்ணத்தில் குறித்துவைத்தேன்.

இரவுகளை பகலாக்கி ,பகல்களை இரவுகளாக்கி உழைத்தேன்.கொஞ்ச காலம் பசி தூக்கம் மறந்தேன்.

பட்டினி கிடந்தேன்,லட்சிய பசிக்கு யாரும் உணவிடாத காரணத்தால்.

மெல்ல மெல்ல ஐயம் தெளிந்தேன்,நிதானம் காத்தேன்.மெல்ல மெல்ல விரும்பிய செயல் கைகூடியது.வெற்றி கனி பறித்தேன் .

தேன் போல இன்பங்கள் திளைத்தது.வசை பாடிய உள்ளமெல்லாம் வாழ்த்தியது.இதயத்தை பெருமை ஆக்கிரமித்தது.

சொல்லிலடங்கா பாராட்டுக்கள்,என்னன்ற வாழ்த்துக்கள்,மலையென பரிசுகள்.உற்றார் உறவினர் ஒரு புறம்.சுற்றமும் நட்பும் ஒரு பெரும்.

ஆனாலும் என் இதயம் தனக்குரிய எதோ ஒன்றை தொலைத்துவிட்டதை போல் ஓர் உணர்வு அல்லது பிம்பம்.

தனிமையின் கரம் பிடித்தேன்.இப்போது இந்த தனிமை எனக்கு கசப்பாக இல்லை.காரணம் தனிமையின் கரம் எனக்கு தேவைப்பட்டது.

கேள்வியே இல்லாத ஒன்றிக்காக விடை தேடும் பயணத்தை தொடர்ந்தேன்.என் பாதை எதுவென்று தெரியாமல் எதிர்ப்பாதையில் நடந்தேன்.எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாததை போல் ஒரு எண்ணம்.

நடந்து நடந்து கால்களும் தேய்ந்தது,அந்தியும் சாய்ந்தது.அது பூங்கா.மாலை மயக்கத்தில் யாருமற்ற பூங்கா.எனக்கான சிம்மாசனமாய் பச்சை நிற இருக்கை.அமர்ந்தேன்.தனிமையின் ராஜனனேன்.என் எண்ணக்குதிரைகளை லாடங்கள் இல்லாமல் அவிழ்த்து விட்டேன்.அந்த மண்ணில் விட்டு விட்டு மழை பெய்தது.என் கண்ணீர்த்துளிகள்!

மனமெங்கும் குழப்பம்,வாடிய முகத்தோடு சிந்தனையில் ஆழ்ந்தேன்.திடுமென்று ஒருத்தி அருகில் வந்தமரந்தால்.சில வினாடிகளுக்கு பிறகு தான் என் கண்கள் அவளை படம் பிடித்தது.
என்ன சோகம் என்று வினவினாள்,என்ன சொல்லுவேன் எது சொல்லுவேன் காரணம் ஏதும் அறிகிலேன்.சொற்கள் வெளிநடப்பு செய்யதது.எங்கள் இருவருக்கும் இடையில் மௌனம் காவங்கு அரசாங்கம் நடத்தியது.

அன்பினால் வாழ்வபவள் போலும்.அன்பான பார்வையால் என் உள்ளத்திற்குள் ஒரு அங்குலம் நுழைந்தாள்.என் தடை பிடித்து தூக்கினாள் அப்போது தான் எழுந்தேன்.தலையை மெல்ல வருடி கொடுத்தால்.உள்ளம் உறைந்து போனேன்.என் குழப்ப எண்ணங்கள் ஒவ்வொன்றும் அந்த வருடல்களில் சுடப்படுவதாய் எனக்குள் ஒரு ஆனந்தம்.கண்மூடி ரசித்தேன்.வருடியவள் கொஞ்சம் அருகில் வந்து நெற்றிப்பொட்டில் முத்தமிட்டாள்.கண்முடி திறப்பதற்குள் இறைவனை போல சட்டென்று மறைந்தாள்.

அவள் பேசிய மௌன மொழியை இப்பொது தான் வாழ்க்கை எனக்கு மொழிபெயர்த்து தந்தது.யாரென்ற தெரியாத அவள் என்னிடம் அன்பு மொழி பேசினாள்.கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வாங்க முடியாத மகிழ்ச்சி என்னுள்.சோக எண்ணங்கள் எல்லாம் வேரோடு அறுக்கப்பட்டதை போல் ஓர் குதூகலம்.சொல்லில் வரையறுக்க முடியாத அன்பை என்னுள் உற்பத்தி செய்தது.

காற்றில் அசையும் மரங்கள் என் பெயரை உச்சரிப்பதாகவும்,பூமி தாய் என் பிஞ்சு பாதங்களை தாங்குவதில் மகிழ்ச்சி கொள்வதாகவும்,இந்த சூரியன்,நிலா,நட்சத்திரம்,உலகம் எல்லாம் என்னை நேசிக்கவே படைக்கப்பட்டதாகவும் உணர்ந்தேன்.

அந்த 60 வயது கிழவியின் முத்தம் எப்படி என் மனோநிலையை மாற்றியது என்பதை இப்போதும் என்னால் யூகிக்க முடியவில்லை.

வாழ்க்கை அர்த்தப்பட்டதாய் உணர்ந்தேன்.தெளிந்த மனம் பெற்றேன்.

நண்பர்களே!"வாழ்க்கை சில சமயம் மகிழ்ச்சியையும்,காதலையும் நாம் எதிர்பாராதவைகளிடத்து ஒளித்து வைத்திருக்கும்.அது வெளிப்படும் போது தெளிவு பிறக்கும்!"


கோவை.சரவண பிரகாஷ்.

எழுதியவர் : சரவண பிரகாஷ் (6-Jun-17, 12:21 pm)
சேர்த்தது : சரவண பிரகாஷ்
Tanglish : aval kodutha mutham
பார்வை : 91

சிறந்த கட்டுரைகள்

மேலே