அந்த ஒரு சொல்
நான் ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த நேரம்.உமா என்ற ஆசிரியரை எனக்கு மிகவும் பிடிக்கும்.ஹிந்தி ஆசிரியர் எல்லோரும் அவரை உமாஜி என்று அழைப்போம்.அருமையாக ஹிந்தி சொல்லி தருவார்.அதனாலே எனக்கு ஹிந்தி மீது ஆர்வம் ஏற்பட்டது.
ஒருநாள் வகுப்பிற்கு வந்தார்.அன்று என்ன பாடம் எடுக்க போகிறார் என்று எல்லோரும் ஆவலாய் காத்திருந்தோம்.உமாஜி இன்று பாடம் எதுவும் எடுக்கப்போவதில்லை என்றும் முக்கியமான அறிவுரைகள் வழங்க போவதாகவும் சொன்னார்கள்.எங்களுள் சிலர் செவிகளை கூர்மையாக்கி கொண்டோம்.பலர் இமைகள் மூடி தூக்கத்தில் ஆழ்ந்தனர்.
அன்று அவர் குமுளி(bubble gum) எடுத்து கொள்வதால் என்னென்ன தீமைகள் இருக்கிறது.அது உடலிற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எடுத்து சொன்னார்.காரணம்,உமாஜி வருகின்ற வழியில் அப்போது பல மாணவர்கள் குமுளியை ஊதிக்கொண்டிருந்தார்களாம். அரை மணிநேரம் அதனை பற்றி தெளிவாக பேசினார்.
துரித உணவுகள் உண்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.நான் ஆழமாக கேட்டுக்கொண்டிருந்தேன்(பாடத்தை கூட இது வரை அப்படி கவனித்து இல்லை).மெல்ல மெல்ல என் எண்ணம் விரிந்தது.நான் அடிக்கடி குமுளி பயன்படுத்துபவன்.தினமும் நண்பர்களோடு சேர்ந்து குமுளி இடுவேன்.எனக்கு பிடித்த ஆசிரியர் அறிவுறுத்தியத்திலிருந்து இன்று வரை நான் குமிழி பயன்படுத்துவதே இல்லை.பலசமயம் நண்பர்கள் வற்புறுத்தியும் நான் ஏற்க வில்லை.
அவர் பேசி 8 ஆண்டுகள் இருக்கும்.இன்னும் என் நினைவில் இருக்கிறது.அவர் சொற்படியே நடந்து வருகிறேன்,என் வாழ்வின் எஞ்சிய பகுதிகளும் ஒருபோதும் குமுளி பயன்படுத்தமாட்டேன் என மனதார சபதம் எடுத்துள்ளேன்.துரித உணவுகளை தான் அவ்வளவு சீக்கிரமாக விடமுடியவில்லை.கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறேன்.அந்த ஆசிரியர் எனக்கு பிடித்தவர் என்பதால் நான் அவர் அறிவுரையை கேட்கவில்லை.எனக்கு பிடித்தார் போல அன்று அவர் பேசியதால் தான் இன்று நான் பல தீயபழக்கங்களை கைவிட்டுள்ளேன்.
கோவை.சரவண பிரகாஷ்.