அரிக்கேன் விளக்கின் வெளிச்சம்
அரிக்கேன் விளக்கில் தொடங்கிய கல்வி,
இன்னும் முடியுறாது தொடர்கிறது வாழ்வின் இறுதியை நோக்கி.
பகலெல்லாம் பள்ளிக்கூடத்தில் நண்பர்களுடன் இருந்த தருணம், வாழ்வில் மறக்கவே முடியாத நினைவுகளாய்.
கபடி விளையாடும் போது, ஓட்டப்பந்தியத்தில் ஒருவர் வெற்றி பெற,
மற்றொருவர் விட்டுக்கொடுக்கும் போது, இருந்த
நட்பின் பிணைப்பை எந்த உறவுகளிலும் உணர இயலாது.
ஆசிரியர்களிடம் கொண்ட பக்தியால் சொன்னதை உடனே நிறைவேற்றிப் படிப்பில் சுட்டி பையனாக இருந்த தருணம்,
பள்ளிக்கூட இடைவெளையில் அருகில் உள்ள கிணற்றில் நீந்தி குளித்ததால் ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டு முழித்த போது,
தண்டிக்காது கண்டித்து விட்ட ஆசிரியர்கள் என மீண்டும் மீண்டும் மறுசுழற்சியாய் நினைவில் அசைபோட,
சிரிக்கிறேன் நானா அப்படியெல்லாம் இருந்தேனென்று எண்ணி.
தாத்தா, பாட்டியுடன் கூரைவீட்டில் வாழ, இரவு நேரங்களில் மழை பெய்தால் மேற்கூரை வழியே மழைநீர் சொட்டுச் சொட்டாக வடிய, விடிய விடிய ஒரு மூலையில் குத்தவைத்து அமர்ந்திருந்த தருணங்கள்,
தாத்தா, பாட்டி சொன்ன கதைகள், இறை நம்பிக்கைகள், தாத்தா சொல்லித் தந்த சூரியநமஸ்காரம் செய்யும் பழக்கம் யாவும் நினைவில் இன்னும் மலருகின்றன வாசனைப் பூக்களாய்...