அதிலேயுமா- நகைச்சுவை குட்டி நாடகம்
.....................................................................................................................................................
அதிலேயுமா- நகைச்சுவை குட்டி நாடகம்
டாக்டர் பாண்டுரங்கத்தின் கிளினிக். வாசனும் வானதியும் தம்பதிகள். தங்கள் குழந்தையோடு கிளினிக்குக்கு வருகின்றனர்.
வாசன்: டாக்டர், எங்களை ஞாபகம் இருக்கா? ரெண்டு வருசம் முன்னாடி உங்க கிளினிக்கிலே பரிசோதனைக் குழாயிலே குழந்தையை உருவாக்கி அதை என் மனைவி சுமக்கிற மாதிரி பண்ணீங்களே..!
டாக். : அட, ஆமாம்.. உங்க விந்தணு, உங்க மனைவியோட கருமுட்டை ரெண்டையும் டெஸ்ட் டியூப்லே இணைச்சி, கருக்குழந்தை கொஞ்சம் வளர்ந்ததுக்கு அப்புறம் இயற்கையான வழியிலே அது பிறக்கிற மாதிரி.. நிறைய மருந்துகளை மிக்ஸிலே போட்டு நறநறன்னு அரைச்சி பிரியாணிக்கு சைட்டிஷ்ஷா வச்சி.. ச்சீ.. ஸாரி.. அதுக்குள்ள ஞாபகம் எங்கயோ போகுது.. ஆமா, எங்க விட்டேன்?
வாசன்: பிரியாணிக்கு சைட்டிஷ்ஷா வச்சி..
டாக். : பிரியாணி தீர்ந்து போய் ரொம்ப நேரமாகுதே?? லேட்டா வந்திருக்கீங்களே? நாளைக்கு வாங்க..
வாசன்: சரி டாக்டர்..
வானதி : என்ன சரி?? வந்ததை விட்டுட்டு எதையெதையோ பேசிட்டு?? டாக்டர், எங்க குழந்தைக்கு பிரசினை இருக்கு.. சரி பண்ணுங்க ! ! !
டாக். : என்னம்மா பிரசினை? குழந்தை உங்களோடதுன்னாலும் கண்டுபிடிப்பு என்னோடது..! பார்த்து பார்த்து வளர்த்திருக்கேன்.. என் கண்காணிப்பு போதாதுன்னு என் பையன் ரவியையும் பார்த்துக்கச் சொல்லி, அவனும் அவனோட கெமிக்கல் இன்டஸ்ட்ரீ வேலையை விட்டுட்டு கருக்குழந்தைய கவனிச்சிட்டிருந்தான்.. தெரியுமில்ல?
வானதி : ஆமா டாக்டர்.. குழந்தையே இல்லாத எங்களுக்கு அழகா, பளபளன்னு குழந்தை பிறந்தது.. குளிப்பாட்ட அவசியமே இல்ல.. கொஞ்சம் ஈரத்துணியாலே துடைச்சாலே போதும்.. பளீர்னு ஆயிடுவான்.. வளர வளர இவன் வித்தியாசமா இருக்கான் டாக்டர்..
டாக். : என்ன வித்தியாசம்?
வாசன்: நடக்கிற வயசிலே ஜிம்னாடிக்ஸ் பண்றான் டாக்டர்.. பொதுவா பசங்க பந்து விளையாடுவாங்க.. இவனை பந்தா வச்சு மத்த குழந்தைங்க விளையாடுது டாக்டர்.. ! மழை பெய்யறப்ப இவனைத் தூக்கி தலையில வச்சுகிட்டா தலை நனைய மாட்டேங்குது..
டாக். :நல்லதுதானேய்யா இதெல்லாம்? இந்தியாவுக்கு ஒலிம்பிக் ஜிம்னாடிக்ஸ்ல தங்க மெடல் கிடைக்கும் பாரு..
வானதி : குழந்தை வெயிலடிச்சா அப்படியே பொரிஞ்சு போறான்.. தண்ணியில போட்டா மிதக்கறான்..
டாக். : அப்ப, உங்க குழந்தைக்கு தண்ணியில கண்டமே வராது..
வானதி :தீயில காட்டினா பிளாஸ்டிக் வாடையடிக்குது டாக்டர்..!
டாக். : பிளாஸ்டிக்கா..? என்ன சொல்றீங்க?
டாக்டரின் மகன் ரவி அப்போது வருகிறான்.
ரவி : அப்பா, டெஸ்ட் டியூப்ல கொஞ்சம் பிளாஸ்டிக் மூலக்கூறை தெரியாத்தனமா கலந்துட்டேம்ப்பா..
டாக்., வானதி, வாசன் : அதிலேயுமா ? ? ?
(மயக்கம் போட்டு விழுகிறார்கள்)
முற்றும்