நெகிழியின் குரல்

பலகையின் இருகையில்
இருக்கையில் - இரு கை
உயர்த்தி சரணடைந்தேன்
கதறியபடி குளிர் துப்பியிடம் !

தேயிலை மருதாணி
பூசிக்கொண்ட பால்
குவளை தாண்டி
என்னுள் குதித்தது !

கொஞ்சமாய் உருகி
உடைந்து போனேன்
என் வலி மீறி
வாய் விட்டு கேட்டேன்
என்னை உருக்கிக்
குடித்தவன் என்ன ஆனான் ?

விடை தெரியும் முன்னரே
வீசப்பட்டேன் வீதியோரம் !

மிஞ்சிய யாவும்
மேலோகம் போனதும்
காற்றென்னை - கடத்திக்
கொண்டுபோய் - விலைகாணா
விளை நிலத்தடி வீசியது !

என்னுள் தங்கும் மழையாவும்
முளை விட முடியாதபடி
முனை வெட்டி வீசும்
மடிக்கா முட்டாள் நான் !

நாயுருவி நகக் கண்ணில்
நானே தலை கொடுத்தேன்
புசிக்கா வயிற்றுக்குள்
பசிப்புல் படராதிருக்க !

மெல்ல எனை மெல்லவந்த
கொம்பனிடம் பெருங்குரலில்
கெஞ்சினேன் - மெல்லாதே
எனைச் செரிக்கும் எமனின்னும்
பிறக்கவில்லை என்றழுது !

சுருக்குத் தசைகள் விரிய
விழுந்தபின் - அமிலங்கள்
விழி தீண்டி விழித்து
உயிர் கொல்லும்
எமனாய் அவதரித்தேன்
ஆசைகள் ஏதுமின்றி !

கருணைக் கொலை
செய்யச் சொல்லி
கதறி அந்நெகிழியை,
கண்டு கொள்ளவேயில்லை
நானும் நீங்களும் !

- வினோதன்

எழுதியவர் : வினோதன் (21-Jun-17, 6:43 pm)
பார்வை : 117

மேலே