புள்ளைகளும் கோலங்களும்

புள்ளிக ளடுக்கிப் போட்டிடும் கோலம்
***புனிதமாய் வாசலில் விளங்கும் !
வெள்ளையில் கோடு விரல்களா லிழுத்து
***விரும்பிய வண்ணமும் கொடுத்தால்
உள்ளமு மள்ளும்; உதித்திடும் போதில்
***உண்மையில் தியானமாய்த் திகழும் !
தெள்ளிய ஞானம் செறிவுடன் சேரும்
***சிந்தனை விரிந்திடும் நன்றே !

மாவினால் கோலம் வாசலில் போட
***மகிழ்வுடன் எறும்புக ளுண்ணும் !
காவியால் சுற்றிக் கரைகளு மிட்டால்
***கலைநயங் கொஞ்சிடச் சிரிக்கும் !
பூவினை நடுவில் பொலிவுடன் வைத்தால்
***புத்துயிர் பெற்றதும் திகழும் !
பாவினால் தீட்டிப் பார்த்திட நெஞ்சம்
***பரவச மாகிடும் திண்ணம் !

சீர்மிகு விழிகள் செலுத்திடும் கவனம்
***சிந்தையை ஒருநிலைப் படுத்தும் !
சோர்வினை யகற்றிப் புத்துணர் வூட்ட
***சுறுசுறுப் பாகிடும் எண்ணம் !
கார்குழல் கொண்ட கன்னியர் முகத்தில்
***களிப்பினில் புன்னகை மலரும் !
மார்கழி மாதம் வாசலில் கோலம்
***மகத்துவம் மிக்கது தானே !

கணக்குடன் புள்ளி கவனமா யிடவே
***கண்களின் பார்வையும் கூடும் !
உணர்வினி லொன்றி உவகையும் பொங்க
உயர்வெனப் போற்றிடு வோமே !
வணங்கிடத் தோன்றும் வனப்புடன் திகழும்
***வரமிது தமிழரின் கலையே !
இணக்கமாய்ப் புள்ளி இணைந்திடல் போலே
***இல்லறம் சிறப்புறும் நன்றே !!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-Jul-17, 1:35 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 1516

மேலே