திருமணங்களும் காரணங்களும்------ சீர்திருத்தத் திருமணங்கள்
ஏறு பொழுதில் (காலையில்) தான் கல்யாணம் கட்டணும், இறங்கு பொழுது அவ்வளவா சொகப்படாது’ - இப்படித்தான் நம்மில் பெரும்பாலான மக்கள் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேதாரண்யம் அருகிலுள்ள ஆயக்காரன்புலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் இந்தச் சம்பிரதாயத்திலிருந்து விலகி நிற்கின்றன. இங்கு, திருமணங்கள் மாலையில்தான் நடக்கின்றன!
ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் நடக்கும் 99 சதவிகித திருமணங்களுக்கு மாலை 6 மணி முதல் 7.30-க்குள் தான் நேரம் குறிக்கிறார்கள். நாம் போயிருந்தபோதும் ஆயக்காரன்புலம் காசிவீரம்மாள் திருமண மண்டபத்தில் தனது அண்ணன் மகளின் (மாலைநேர) திருமணத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் பஞ்சநதிக்குளம் கிழக்கைச் சேர்ந்த சி.ஆர்.வெங்கட். “காலையில் திருமணம் செய்யுறது தானே உலக வழக்கம், நீங்க மட்டும் ஏன் உல்டாவா மாலையில் திருமணம் செய்கிறீர்கள்?” என்று அவரிடம் கேட்டோம்.
நமது கேள்வியை மெல்லிய சிரிப்புடன் எதிர்க் கொண்ட வெங்கட், “பெரும்பாலும் திருமண வீட்டார் அவர்களது வசதிப்படிதான் தேதி, நேரம் குறித்து திருமணங்களை நடத்துகிறார்கள். ஆனால், நாங்கள் அப்படி இல்லை. அழைக்கப்படும் அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என்பதற்காக, திருமணங்களை மாலையில் நடத்துகிறோம். ஆயிரம் பத்திரிகை வைச்சோம்னா, ரெண்டாயிரம் பேராச்சும் வருவாங்க. அப்படி எல்லாரும் சேர்ந்துவந்து வாழ்த்தினாத்தானே நல்லது.
மூணு வேளைக்குச் சாப்பாடு போடணும்
இதுமட்டுமில்லைங்க, மாலை நேர திருமணங் கள்ல சாப்பாட்டுச் செலவும் பாதியாக் குறைஞ்சிடும். காலைல கல்யாணம்னா முதல் நாள் ராத்திரி, கல்யாணத்தன்னிக்கு காலை டிபன், மதியச் சாப்பாடுன்னு மூணு வேளைக்குச் சாப்பாடு போடணும். சாப்பாடு பெரிய விஷயமில்லைன்னாலும் இப்படிச் சமைக்கிறதால நிறைய வீணாவும் போகுது. ஒரு வேளை விருந்துங்கிறதால திட்டத்தோட திட்டத்தோட செய்யலாம்; வெரைட்டியாவும் செய்யலாம். மளிகைச் சாமான் பட்ஜெட்டும் கணிசமா குறையுது. சமையல்காரருக்கு பாதிச் சம்பளம்தான், கல்யாண மண்டபத்து வாடகையும் மூணுல ஒரு பங்காகிருது. இப்படிப் பல நல்ல விஷயங்கள் இருக்கதாலதான் எங்க பக்கம் எல்லாருமே இரவுத் திருமணங்களை நடத்துறோம்” என்று சொன்னார்.
அதுசரி, மாலை நேரத்தில் திருமணம் நடத்தும் வழக்கம் எப்படி வந்தது? இதற்கு பதில் சொன்னார் ஆயக்காரன்புலம் விவசாயி பாலு. “இருபது வருசத்துக்கு முந்தி, நாங்களும் காலையிலதான் திருமணங்களை நடத்திட்டு இருந்தோம். இந்தப் பகுதி முழுக்க பூ விவசாயம் அதிகம். பூக்கும் பூக்களை அதிகாலை 4 மணியிலேர்ந்து 8 மணிக்குள்ள எடுத்தாத்தான் ஆச்சு; இல்லைன்னா அது வேஸ்டாயிடும். அதனால, பெரும்பாலான விவசாயக் குடும்பங்கள்ல ஆணும் பொண்ணுமா சேர்ந்து காலை நேரத்துல பூக்கொல்லையிலதான் பாடுபடுவாங்க. பூக்களைப் பறிச்சு கடைகளுக்கோ மண்டிக்கோ கொண்டுபோய் நேரத்துக்குச் சேர்த்தாகணும். இப்படியொரு கட்டாயம் இருக்கிறப்ப, காலையில கல்யாணம் வெச்சா எப்படிப் போய்க் கலந்துக்க முடியும்? இதுபத்தி முக்கியமான சிலபேரு கூடிப் பேசி மாலை நேரத்துல திருமணங்களை நடத்தலாம்னு முடிவெடுத்தாங்க. ஒன்றிரண்டு பேர் அப்படி நடத்த ஆரம்பிச்சதும் பிற்பாடு அதுவே வழக்கமாகிருச்சு” என்கிறார் பாலு.
அனைத்தும் சீர்திருத்தத் திருமணங்கள்
மாலைநேர திருமணம் ஒரு அறிவுப் புரட்சி என்றால் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் இந்தப் பகுதி மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கு நடக்கும் திருமணங்கள் அனைத்துமே சீர்திருத்தத் திருமணங்களே. பி.வி.ராஜேந்திரன், மா.மீனாட்சிசுந்தரம், ஓ.எஸ்.மணியன், எஸ்.கே.வேதரத்தினம், பழனியப்பன் என தங்களுக்கு வேண்டிய உள்ளூர் வி.ஐ.பி-க்களை அழைத்துவந்து, அவர்கள் கையால் தாலி எடுத்துக் கொடுக்கவைத்து திருமணத்தை நிறைவு செய்கிறார்கள். பிரபலங்கள் யாரும் வராவிட்டால், அங்கிருக்கும் பெரியவர் ஒருவர் தாலி எடுத்துக்கொடுக்க இனிதே திருமண வைபவம் நிகழ்ந்தேறுகிறது.
சடங்கு, சம்பிரதாயங்கள் மனிதனுக்காக மனிதனால் உருவாக்கப்பட்டவையே. இதை உணர்ந்து, தங்கள் வாழ்க்கை முறைக்கும் காலத்துக்கும் தக்கபடி தங்களை மாற்றிக்கொண்ட இந்த மக்கள் பாராட்டத்தக்கவர்களே!
கண் தானத்திலும் இவர்கள் முன்னோடிகள்!
வாழ்க்கையைத் தொடங்குவதில் வழக்கத்தை மாற்றிய இந்த மக்கள், வாழ்க்கையின் முடிவையும் மற்றவருக்குப் பயனுள்ள வகையில் மாற்றியிருக் கிறார்கள். இந்தப் பகுதியில் கண் தான ஆர்வலர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் வீடுகளில் யாராவது இறந்துவிட்டால் முதலில் தகவல் கொடுப்பது கண் தானம் சம்பந்தப்பட்ட அமைப்புக்குத்தான். நகரத்துவாசிகள்கூட கண்தானம் செய்யத் தயங்கும் நிலையில், கடந்த மூன்றாண்டுகளில் ஆயக்காரன்புலம் கிராமத்திலிருந்து 1,400 ஜோடி கண்கள் தானமாக தரப்பட்டுள்ளன.