காமராஜர் கட்டாத அணைகள்

ஒருவகையில் காங்கிரஸ் சாம்ராஜ்யத்தை அண்ணா வீழ்த்திய பிறகு இங்கு உருவான மாற்றங்கள் தமிழகத்தின் தனித்தன்மையை வளர்த்தெடுக்கவும் சுயமரியாதைமிக்க மாநில சுயாட்சிக்கான சகல திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் பெருமளவில் உதவியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் திமுக அதிமுகவின் சாதனைகளைவிட அவர்கள் ஆட்சியில் தமிழகம் கண்ட வேதனைகளே அதிகம்.

பறிபோன நீர்நிலைகள்
தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் பாழ்பட்டுப்போய் தமிழகத்தின் நீராதாரம் இன்று வானளாவிய கேள்விக்குறியாக நிற்பதற்கு ஆற்றுப் புறம்போக்கு ஆக்கிரமிப்பு, ஏரிப்புறம்போக்கு ஆக்கிரமிப்பு, பாசனக் கால்வாய்கள் காணாமல் போன கதைகள், ஊர்நடுவே ஊருக்கு வெளியே இருந்த குளங்கள் குளக்கரைகள் ஆக்கிரமிக்கப்பட்ட அவலங்கள் நடந்தேறியதால் ஏற்பட்ட பக்கவிளைவுகளில் முக்கியமானது மினரல் பாட்டில்களும் தண்ணீர் கேன்களும் தண்ணீர் லாரிகளும் எப்போது வருமென மக்கள் ஆலாய் பறப்பதுதான்.

வெள்ளம் இல்லாத காலத்தில் மண்ணில் ஈரம் கொஞ்சமேனும் இருக்க தன்போக்கில் இருக்கும் சீரான ஆற்றுப்பாதைகள் முக்கியம். ஆற்றிலும் மணல் எடுக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுமதித்ததால், அதன் சதைகள் வெட்டப்பட்டு இன்று எலும்புக்கூடாகி, தமிழகத்தின் முக்கிய ஆறுகள் வறண்டு போயின.

வங்கிக் கணக்கும் இல்லாத முதல்வர்

இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு பேச்சுக்கு, ''அந்த காலத்துல காமராஜர் ஆட்சியே தேவலாம்'' என்று சொல்வதுண்டு. காமராஜர் ஆட்சியில் ஊழலே இல்லையா? என்றும் கேட்லாம். உலக வரலாறு தோன்றிய நாளிலிருந்தே ஊழல் இல்லாத நிர்வாகமே இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் காமராஜர் ஒரு முதலமைச்சராக இருந்தபோது தனக்கென்று ஒரு வங்கிக் கணக்குகூட வைத்துக்கொள்ளாதவர். அவர் இறக்கும்போது மிச்சம் இருந்தது சில வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான்.

அதன்பிறகு வந்த முதலமைச்சர்கள் மட்டும் அல்ல, சாதாரண அமைச்சர்களுக்குக்கூட ஒரு கல்லூரியாவது சொந்தமாக இருக்க வேண்டும். முதலமைச்சருக்கு உதவியாளராக இருந்தவருக்கே ரூ.350 கோடி சொத்து இருக்கிறது என்ற செய்தியை சர்வசாதாரணமாக இன்று நாம் ஜீரணித்துவிட்டுச் செல்கிறோம்.

இன்றைய காங்கிரஸ்

இதனால் காங்கிரஸ்காரர்கள் காமராஜர் ஆட்சியை தருவோம் என்று அடிக்கடி சொல்லி தமிழகத்தை ஆறுதல்படுத்துவதாக நினைத்து தங்களையே ஆறுதல்படுத்திக்கொள்வதுண்டு. 'மீண்டும் காமராஜர் ஆட்சி மலரும்' என்ற வெடியை அவர்கள் அடிக்கடி பற்ற வைக்கிறார்கள்.

அது பல சமயங்களில் ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் எதிர்க்கட்சியினர் மேடைகளிலும் ''டமால் டுமீல்'' என்று நகைச்சுவையாக வெடிக்கத்தான் செய்கிறது. ஆனால் காங்கிரசுக்கு தமிழகத்தில் இருந்த கொஞ்சநஞ்ச செல்வாக்கும் குறைந்துகொண்டு வருவது ஏன் என்பதையும் அதை எவ்வாறு சரி செய்வது என்பதிலும் அவர்களுக்கு கொஞ்சமேனும் சிரத்தை இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இன்று அதிமுகவிலும் நிறைய குழப்பம். எதிர்காலத்தில் திமுகவின் வெற்றி மதில்மேல் பூனை.

ஆனால் சைக்கிள் கேப்பில் பிஜேபியும் இங்கே நுழைந்து காலி இருக்கைகள் உருவாவதற்கான சாத்திய எதிர்பார்ப்புகளோடு முன்கூட்டியே துண்டு போடவும் பார்க்கிறது. அதற்காக சினிமா கவர்ச்சியையும் முன்னிறுத்த அவர்கள் தயங்க மாட்டார்கள் என்றுதான் தெரிகிறது. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வந்தபிறகு பாஜகவின் கடந்த மூன்றாண்டுகால ஆட்சியை நினைக்கும்போது தமிழகம் பாஜகவை வரவேற்க சிவப்புக்கம்பளம் விரிக்குமா என்பது சந்தேகம்தான்.

என்னதான் இவர்கள் வளர்ச்சி! நல்லாட்சி! என்றெல்லாம் சொன்னாலும் உண்மையான வளர்ச்சியும் நல்லாட்சியும் காமராஜர் ஆட்சிதான். அவர் காலத்தில் தோன்றிய தொழிற்பேட்டைகளும், நூற்பாலைகளும், கல்விச்சாலைகளும், நீர்ப்பாசன அணைத்திட்டங்களும், இரும்பு ஆலை, சிமெண்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், ரப்பர் ஆலைகள், நிலக்கரி, சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் என நாட்டின் அஸ்திவாரம் போன்ற நிர்மாணப் பணிகளை இன்றுவரை முறியடிக்க எவராலும் முடியவில்லை. இந்தியாவை அல்ல உலகையே திரும்பிப் பார்க்க வைத்த அந்த நாட்கள் திரும்பவும் வருமா என்றும் சொல்வதற்கில்லை.

கட்டாத அணைகள்

அவரது ஆட்சியின்போது சட்டமன்றத்தில் நடந்த ஒரு உரையாடலை அடிக்கடி அக்கால பெரியவர்கள் நினைவுகூர்வதுண்டு. சட்டப்பேரவையில் எதிர்வரிசையில் இருந்தவர்களில் டாக்டர் சத்தியவாணிமுத்து எழுந்து ''விவசாயத்திற்கு காமராஜரின் சாதனை என்ன'' என்று கேட்டாராம்.

அதற்கு காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் சொன்னதாக சொல்வார்கள், ''காமராஜர் தமிழக விவசாயத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நீர்ப்பாசனங்களை ஒழுங்கு செய்ய தமிழகத்தின் முக்கிய ஆறுகளுக்கெல்லாம் அணைகளை கட்டியிருக்கிறார். அவர் கட்டாத அணைகள் சில உண்டு. அது கேஆர்ஆர், எஸ்எஸ்ஆர், எம்ஆர்ஆர்... ஆகிய ஆறுகளுக்கெல்லாம்தான் அவர் அணை கட்டவில்லை'' என்று பதில் சொன்னதாக சொல்வார்கள்.

இவர்கள் மூவருமே திராவிட இயக்கங்களின் போர்வாளாக மேடைகளில் முழங்கி, காங்கிரஸை மட்டுமல்ல காமராஜரையும் கடுமையாக தாக்கி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டிய அணைகள்

காமராஜர் கட்டிய அணைகள்: 1. கீழ்பவானி, 2. மணிமுத்தாறு, 3. காவிரி டெல்டா, 4. ஆரணியாறு, 5. வைகை நீர்த்தேக்கம், 6. அமராவதி (அணை), 7. சாத்தனூர் (டாம்), 8. கிருஷ்ணகிரி, 9. புள்ளம்பாடி, 10. வீடூர் அணைத்தேக்கம், 11. பரம்பிக்குளம், 12. நெய்யாறு – போன்றவைகளாகும்.

அதுபோல அவர் காலத்தில் தொடங்கப்பட்ட நீர் மின் திட்டங்கங்கள் 1. 26 கோடி ரூபாயில் குடிநீர்மின் திட்டம், 2. 10 கோடி ரூபாயில் பெரியாறு மின்திட்டம், 3. 8 கோடி ரூபாயில் கும்பார் – அமராவதி மின் திட்டம், 4. 12 கோடி ரூபாய் செலவில், 75,000 கிலோ வாட் மின்சாரம் உபரியாகக் கிடைக்க வழி செய்த மேட்டூர் கீழ்நிலை நீர் செல்வழித் திட்டம் போன்றவைகளாகும்.

டெல்லிக்கு சென்றிருக்கக் கூடாது

மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தேசிய பணியாற்ற வேண்டும் என்று காமராஜர் வேறு எதற்கோ சொன்னதை வைத்து அதையே ஒரு திட்டமாக ஆக்கிவிட்டார் நேரு. அதற்கு கே பிளான் (காமராஜர் பிளான்) என்றும் பெயர்வைத்தார். பிற மாநில தலைவர்களை டெல்லிக்கு அழைப்பதற்குமுன் முதற்கட்டமாக காமராஜரையே காங்கிரஸ் கமிட்டிக்கு தேசிய பணியாற்ற புதுடெல்லிக்கு வரவழைத்துவிட்டார். காமராஜர் ஆட்சி பாதியிலேயே தடைபட்டது.

பின்னர் இந்திய அரசியலின் பெரும்சக்தியாக இந்திரா காந்தி உருவாக இவரே காரணமானார் என்பதும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இந்தி திணிப்பைக் கைவிடக் கோரியபோது யாரந்த அந்த காமராஜர் எனக் கேட்டதும் பிறகு வந்த வருடங்களில் இந்திரா காந்தி தனது ஆட்சியில் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்ததும் அதை காமராஜர், ஜெயப்பிரகாஷ் நாராயணன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்தும் வரலாறு...

எது எப்படியிருந்தாலும் காமராஜர் அந்த தவற்றை செய்திருக்கக் கூடாது. எனக்கு தமிழ்நாட்டில் இனிமேல்தான் வேலை அதிகம். எனது தாய்த்தமிழகத்தில் பணியாற்றுவதைவிட்டு நான் டெல்லிக்கு வரமுடியாது என்று சொல்லியிருக்க வேண்டும். ஏனோ தேசிய பாசம் அவரை அப்படி சொல்லவைக்க விடவில்லை. இழப்பு தமிழகத்திற்குத்தான். அது சாதாரண இழப்பு அல்ல. அதன்பிறகு தமிழகம் அல்ல இந்தியாவே அப்படியொரு தலைவரைக் காணவில்லை.

ஜூலை 15, இன்று காமராஜர் பிறந்தநாள்

பால்நிலவன்

எழுதியவர் : (20-Jul-17, 7:55 am)
பார்வை : 75

சிறந்த கட்டுரைகள்

மேலே