தொலைக்காட்சியினால் ஏற்படும் நன்மைகள்
உலகில் எந்தவொரு விஷயமும் நன்மை-தீமை ஆகிய அம்சங்கள் கலந்தே இருக்கின்றன என்பது ஒரு பழைய பொன்மொழி. ஆனாலும் அதை மாணவர் பலரும் நடைமுறையில் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இதனால்தான் பலரும், தாங்கள் நினைத்ததை அடையமுடியாமல் தோல்வி அடைந்து விடுகின்றனர். படிப்புக்கு எதிரி என்று நெடுங்காலமாகவே கூறப்பட்டு வரும் தொலைக்காட்சிப் பெட்டியை முறையாக பயன்படுத்துவது பற்றி பலருக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை.
ஒரு சிறந்த மற்றும் வெற்றிகரமான மாணவராக திகழ நினைக்கும் ஒருவர், எவ்வாறு தொலைக்காட்சியை வெற்றிகரமாக பயன்படுத்துவது என்ற வித்தையை கற்று வைத்திருப்பார் அல்லது கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவார். நீங்களும் ஒரு சிறந்த மாணவராக திகழ வேண்டுமெனில், நாங்கள் இங்கே கூறும் வித்தையை படித்து கற்றுக்கொள்ளுங்கள்.
ஒரு தொலைக்காட்சியில் எத்தனையோ சேனல்கள் இருக்கின்றன. அவற்றில் ஏறக்குறைய 90 சதவீதத்திற்கும் மேல் வணிக நோக்குடைய சேனல்கள்தான் என்பது ஒரு எளிய உண்மை. அதேசமயம், மீதியுள்ள சில சேனல்கள் பல அற்புதமான விஷயங்களை நமக்கு போதிக்கின்றன. எந்நேரமும் ஒரு மாணவர் புத்தகமும், கையுமாக அலைய முடியாது என்பது ஒரு நடைமுறை உண்மை. மேலும், வெறும் பாடப் புத்தகங்களையே படிக்கும் மாணவர்க்கு பொது அறிவு இருக்காது என்பதும் உண்மை.
இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக விளையாட்டு, நண்பர்களுடன் நேரம் செலவழித்தல் போன்றவை இருந்தாலும், தொலைகாட்சி என்பதும், பொழுதுபோக்கில் ஒரு தவிர்க்க முடியாத அம்சம். அதில் நாம் பார்த்திராத, கேள்விப்பட்டிராத பல சுவையான, அதேசமயம் மிகுந்த பயனுள்ள பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகமுண்டு.
டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியாக்ரபிக் சேனல், அனிமல் பிளானெட் சேனல் போன்ற அதிசய உலகங்களை பற்றிய சேனல்கள் ஒருபுறம் என்றால், பி.பி.சி. மற்றும் தூர்தர்ஷன் போன்ற உலகை காட்டும் சேனல்களும் உள்ளன. உலக சம்பவங்களை அற்புதமாக காட்டும் பி.பி.சி. சேனலோடு, கலாச்சார நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் பொதிகை போன்ற தமிழ் சேனல்களையும் பார்க்கலாம்.
மேலும் தூர்தர்ஷன் சேனலில், பல கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்த கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பு பற்றிய விவரங்கள் செய்தித்தாள்களிலும் வரும். எனவே அவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். கடவுள் நம்பிக்கை உள்ள மாணவர்கள், ஆன்மீக சேனல்களைப் பார்த்து மனதை ரிலாக்சாக வைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் தியான உணர்வையும் பெறலாம். உங்களின் முயற்சிக்கு, பெற்றோர்களின் ஆதரவையும் கேட்டுப் பெற வேண்டும்.
ஒருவகையில் பார்த்தால், தொலைகாட்சி ஒரு அறிவுக்களஞ்சியமாகவே திகழ்கிறது. அந்த அறிவுக்களஞ்சியத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொண்டு செயல்படுத்தினால், நீங்களும் ஒரு அறிவுக்களஞ்சியம் ஆகலாம்.